T20 worldcup semifinal 2 : நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று (ஜூன் 27) காலை 6 மணிக்கு தென்னாப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
அதில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது அனைவரது கண்களும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி மீது குவிந்துள்ளது.
ஆனால் போட்டி நடைபெறும் கயானாவில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தற்போது வரை மழைபெய்து கொண்டே இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இரு அணி ரசிகர்களுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. அதாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் வழங்கப்படாது.
இதனால் இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஆனால் இந்திய ரசிகர்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என்பது கள நிலவரம் உணர்த்தும் உண்மை என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.
ஏன் ரிசர்வ் டே கிடையாது?
இந்தியா – இங்கிலாந்து போட்டி இந்திய நேரப்படி 27 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. கயானாவின் உள்ளூர் நேரப்படி 27 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
ரிசர்வே டே கொடுக்கப்படும் பட்சத்தில் போட்டி 28 ஆம் தேதிக்கு செல்லும். ஆக, அரையிறுதியில் வெல்லும் அணி இடைவெளியே இல்லாமல் அடுத்த நாளே இறுதிப்போட்டியில் ஆட வேண்டியிருக்கும். அப்படி எந்த அணியும் விளையாட விரும்பாது என்பதால் இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை.
கூடுதலாக 250 மணி நிமிடம்!
அதேவேளையில் இரு அணிகளுக்கும் சம அளவில் 250 நிமிடங்களை கூடுதல் நேரமாக கொடுத்திருக்கிறது ஐசிசி.
அதாவது போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்தால், கூடுதல் நேரத்தை பயன்படுத்தி மாலை வரைக்கும் காத்திருந்து கூட போட்டி நடத்தி முடிக்கப்படும்.
போட்டியே நடத்த முடியவில்லை என்றால்…?
கூடுதலாக கொடுக்கப்படும் இந்த 250 நிமிடங்கள் பயன்படுத்தியும் போட்டியை நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்யும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றில் அதிக புள்ளிகளை எடுத்திருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு தான் அது சாதகமாக அமையும். ஏனெனில் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் 4 புள்ளிகளுடன் +1.992 ரன்ரேட் வைத்துள்ளது.
அதேவேளையில் இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் +2.017 ரன்ரேட் வைத்துள்ளது.
எனவே மழை பெய்து போட்டி நடைபெறாத பட்சத்தில் இந்திய அணி ரன்ரேட் அடிப்படையில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
எனவே மழையோ வெயிலோ எதுவானாலும் இந்திய ரசிகர்கள் போட்டியை கூலாக பார்க்கலாம் என்பதே உலகக்கோப்பை அரையிறுதி கள நிலவரம் நமக்கு உணர்த்தும் உண்மை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மருத்துவக் கல்வியும் நீட் தேர்வு எனும் மோசடியும்!
திருமணமான பெண்களுக்கு பணி வழங்க மறுப்பு? ஃபாக்ஸ்கான் விளக்கம்!