INDvsENG Trouble for the Pakistan origin player
விசா சிக்கல் காரணமாக பாகிஸ்தான் வம்சாவளி வீரர் சோயிப் பஷீர் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு அறிமுக வீரராக களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் நாளை (ஜனவரி 25) முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.
இந்திய அணியில் மூத்த வீரர் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் விலகிய அணியில் அவருக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவரது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
அறிமுக வீரருக்கு விசா சிக்கல்!
இதேபோன்று அறிவிக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பாகிஸ்தான் வம்சாவளியான 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.
எனினும் அவர் இந்தியாவிற்கு வர விசா பெறுவதில் சிக்கல் நீடிப்பதால் அவர் நாளை நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய தூதரகத்தில் தேவையான ஒப்புதலைப் பெறுவதற்காக பஷீர் லண்டனுக்கு திரும்பியுள்ளார்.
வெறுப்படைய செய்கிறது!
இந்த நிலையில் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “பஷீர் இந்தியாவிற்கு வருவதற்காக விசா பெறுவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உண்மையில் இது வெறுப்படைய செய்கிறது.
அறிமுகப்போட்டியில் விளையாட இருக்கும் ஒரு இளம் வீரருக்கு இதுபோன்ற சம்பவம் நடப்பதை நான் விரும்பவில்லை. இளம் வீரரான அவரை காயப்படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.
ஒரு கேப்டனாக, உங்கள் அணியில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற விஷயத்தால் பாதிக்கப்படும்போது, நீங்கள் சற்று உணர்ச்சிவசப்படுவீர்கள். பஷீருக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு.
அவர் மீண்டும் லண்டனுக்கு சென்றுவிட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் இந்த வார இறுதியில் இந்தியா வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இதே போன்று விசா பிரச்சனையில் முன்பு பாகிஸ்தான் வம்சாவளியான ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் சாகிப் மஹ்மூத் ஆகியோரும் சிக்கினர். அவர்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது வீரராக சோயிப் பஷீர் சேர்ந்துள்ளார்.
இரு அணி வீரர்கள் விவரம்!
இந்திய அணி : ரோகித் சர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஸ்ரீகர் பாரத், துருவ் ஜூரல், அவேஷ் கான், குல்தீப் யாதவ் , அக்சர் படேல்.
இங்கிலாந்து அணி : பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, மார்க் வூட், ஒல்லி ராபின்சன், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன், டேனியல் லாரன்ஸ், சோயிப் பஷீர், கஸ் அட்கின்சன், டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோலிக்கு பதிலாக படிதார் அணியில் சேர்க்கப்பட்டது ஏன்? : ரோகித் விளக்கம்!
இந்தியாவில் அறிமுகமானது Hero Xtreme 125R… கலர், விலை, சிறப்பம்சங்கள் என்ன?
கேப்டன் மில்லர் கதை திருட்டு: எழுத்தாளர் சங்கத்தில் வேல ராமமூர்த்தி புகார்!
INDvsENG Trouble for the Pakistan origin player