INDvsENG : இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகும் பாகிஸ்தான் வம்சாவளி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஹைதாரபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டணத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ரெட்டி மைதானத்தில் நாளை (பிப்ரவரி 2) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் இருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் விலகினர். அவர்களுக்கு பதிலாக முதல்தர போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்து அசத்தி வரும் சர்ப்ராஸ் கானுடன் சவுரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரையும் தேர்வுக் குழு அணியில் சேர்த்துள்ளது.
ஷோயிப் பஷீர் அறிமுகம்!
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஜாக் லீச்சிற்கு பதிலாக 20 வயதான சோமர்செட் ஆஃப் ஸ்பின்னர் ஷோயிப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியான இவர் தனது அறிமுகப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு பஷீர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், விசா கிடைக்காமல் ஏற்பட்ட சிக்கலால் அவர் இந்தியாவிற்கு வர முடியவில்லை. அவர் நாளை நடைபெறும் இரண்டாது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதேபோன்று மற்றொரு பாகிஸ்தான் வம்சாவளியான 19 வயது லெக் ஸ்பின்னர் ரெஹான் அகமது, முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் கராச்சியில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்விங் கிங்!
மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய மார்க் வுட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், பஷீர், ரெஹான் இருவருடனும் நாளை ஆண்டர்சன் தனது 184வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உத்தேச அணி விவரம் :
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், அக்சர் படேல், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து உத்தேச அணி விவரம் :
சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”சாதியற்றவர் சான்றிதழ் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும்” : உயர்நீதிமன்றம்!
பிப்ரவரி 12ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்!