WorldCup2023: உலகக்கோப்பை யாருக்கு? வெற்றியை தீர்மானிக்க போகும் டாப் 5 பிளேயர்கள்!

சிறப்புக் கட்டுரை விளையாட்டு

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (நவம்பர் 19) நடைபெற போகும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யார் கோப்பை வெல்ல போகிறார்கள்? என்பது தான் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வி.

இதற்கான விடை நாளை இரவு தெரிந்து விடும். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 4-வது முறையும் ஆஸ்திரேலியா 8-வது முறையுமாக நாளை (நவம்பர் 19) விளையாட உள்ளன. இதில் இந்தியாவின் முக்கிய பிளேயர்களாக கோலி, ஷமியும் ஆஸ்திரேலியாவின் முக்கிய பிளேயர்களாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் 5 வீரர்களும், இந்தியா தரப்பில் 5 வீரர்களும் போட்டியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என விமர்சகர்கள் கணித்துள்ளனர். இதுவரை இரண்டு அணிகளும் நேருக்கு நேராக விளையாடிய போட்டிகளில் இவர்கள் என்ன ரெக்கார்டுகள் வைத்திருக்கிறார்கள்? என்பதை இங்கே பார்க்கலாம்.

1. ரோஹித் சர்மா Vs மிட்செல் ஸ்டார்க்

கடந்த அக்டோபர் 8-ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை முதல்முறையாக ஜோஷ் ஹேசல்வுட் எடுத்தார். அந்த போட்டியில் ரோஹித் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதேபோல பேட் கம்மின்ஸும், ரோஹித்தை அதிகளவு வீழ்த்தியது இல்லை. 16 போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே கம்மின்ஸ், ரோஹித் விக்கெட்டை எடுத்துள்ளார்.

ஆனால் மிட்செல் ஸ்டார்க்கிடம் ரோஹித் 3 முறை தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். 141 பந்துகளை சந்தித்து 146 ரன்கள் எடுத்திருக்கும் ரோஹித், மிட்செல்க்கு எதிராக 48.7 சராசரி வைத்துள்ளார். நாளை நடைபெறும் போட்டியிலும் மிட்செல், ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வார். அவரிடம் தன்னுடைய விக்கெட்டை ரோஹித் அவசரப்பட்டு இழக்காமல் நிதானமாக ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

2. விராட் கோலி Vs ஜோஷ் ஹேசல்வுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு கோலி & ராகுல் பார்ட்னர்ஷிப்பில் அடித்த 165 ரன்களும் முக்கிய காரணமாகும். அதோடு கோலி 12 ரன்களில் கொடுத்த கேட்சை மிட்செல் மார்ஷ் தவற விட்டதும் ஒரு பெரிய திருப்பமாக அமைந்து. அதேபோல இந்த போட்டியிலும் கோலி ரன்களை குவிக்க வேண்டும் என்றால் அவர் நிதானமாக ஆட வேண்டும்.

குறிப்பாக ஹேசல்வுட் பந்துவீச்சை கோலி எப்படி சமாளித்து ஆடுகிறார் என்பதை பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இருக்கும். இதுவரை ஜோஷ் ஹேசல்வுட்டின் 88 பந்துகளை சந்தித்துள்ள கோலி அதில் 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதோடு 5 முறை அவரின் பந்தில் அவுட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹேசல்வுட்டை வைத்து கோலி விக்கெட்டை எடுக்க கம்மின்ஸ் முயற்சிப்பார். இந்த சூழ்ச்சி வலையில் கோலி சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

3. கே.எல்.ராகுல் Vs ஆடம் ஜாம்பா

லீக் சுற்று போட்டியில் ஆடம் ஜாம்பாவின் 25 பந்துகளை எதிர்கொண்டு அவருக்கு எதிராக 29 ரன்களை ராகுல் அடித்தார். இது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்துக்கு உள்ளானது. ஏனெனில் ஜாம்பாவின் 138 பந்துகளை எதிர்கொண்டு 133 ரன்களை எடுத்துள்ள ராகுல், 4 முறை அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இருக்கிறார்.

இதனால் தான் லீக் போட்டியில் அவர் ஜாம்பாவின் பந்துகளை அடித்து ஆடியது கவனத்துக்கு உள்ளானது. இதேபோல இறுதிப்போட்டியிலும் ராகுல் விளையாடினால் வெற்றிக்கோப்பையில் இந்தியாவின் பெயரை எழுதி விடலாம்.

4.முகமது ஷமி Vs டேவிட் வார்னர்

நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார். ஏனெனில் இந்த தொடரில் 550 ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருக்கும் வார்னர் நாளையும் இதேபோல பேட்டிங் செய்தால் அது இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக மாறி விடும்.

 

அதே நேரம் இந்தியாவின் மற்ற பவுலர்களை அடித்து ஆடும் வார்னர், ஷமி பந்துகளை கவனத்துடன் தான் எதிர்கொள்வார். ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஷமியின் பந்துவீச்சில் அவர் 3 முறை தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். ஷமிக்கு எதிரான வார்னரின் பேட்டிங் ஆவரேஜ் 34.3 ஆக உள்ளது.

5. கிளென் மேக்ஸ்வெல் Vs குல்தீப் யாதவ்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் மீண்டும் ஒருமுறை அதுபோல தனது அதிரடி பேட்டிங்கை காட்டிட முயற்சி செய்வார். களத்தில் நிலைத்து நின்று விட்டால் பின்னர் அவரை அவுட் ஆக்குவது பெரும் சிரமமாக இருக்கும். அதனால் ரோஹித் அவருக்கு எதிராக குல்தீப் யாதவை தான் பந்து வீச சொல்வார்.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் குல்தீப்பின் 69 பந்துகளை எதிர்கொண்டு அவருக்கு எதிராக 99 ரன்களை மேக்ஸ்வெல் அடித்துள்ளார். பேட்டிங் ஆவரேஜும் 33 ஆக உள்ளது. என்றாலும் குல்தீப்பின் சுழலில் சிக்கி இதுவரை 3 முறை தன்னுடைய விக்கெட்டை மேக்ஸ்வெல் பறிகொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரை ரோஹித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல், ஷமி, குல்தீப் ஆகிய ஐவரும் எப்படி ஆடுகிறார்கள்? என்பதை பொறுத்தே நம்முடைய வெற்றி வாய்ப்பு அமையும். இறுதிப்போட்டியில் வென்று எந்த அணி கோப்பையை கையில் ஏந்த போகிறார்கள்? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

வேந்தர் நியமன தீர்மானம்: பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு… முதல்வர் பதில்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *