INDvsAUS : சர்வதேச அரங்கில் முதல் சதம் கண்ட நிதிஷ் குமார்… மயிரிழையில் மிஸ் ஆன சச்சின் சாதனை!

Published On:

| By christopher

Boxing Day Test : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி அபார சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். மேலும் பாலோ ஆன் தவிர்க்க போராடிய இந்தியா அணியையும் போராடி மீட்டுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய 4வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 221 ரன்கள் குவித்த நிலையில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஆகாஷ் தீப், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் என மொத்தம் 7 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ தடுமாறியது.

இந்த நிலையில் இன்று தொடங்கிய 3வது நாள் ஆட்டத்தில் 8வது விக்கெட்டுக்கு இணைந்த இளம் வீரர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் நிதானமாக விளையாடியது.

சுந்தர் அரைசதம் (50) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 127 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்காக எட்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. 128 ரன்களுடன் ஹர்பஜன் சிங் – சச்சின் ஜோடி முதலிடத்தில் உள்ளது.

நிதிஷின் முதல் சதமும், சாதனைகளும்

அதேவேளையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 105 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணியும் 3ஆம் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 358 ரன்கள் குவித்துள்ளது.

நிதிஷ் குமார் தனது முதல் சதத்தின் மூலம் பல அபாரமான சாதனைகளை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அறிமுக தொடரிலேயே சதம் அடித்த சாதனை வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

8வது இடத்தில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார்.

ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் சதம் அடித்த மூன்றாவது இளம் இந்திய வீரர் (21 வருடம் 216 நாட்கள்) ஆனார். அவருக்கு முன்னதாக 1992ஆம் ஆண்டு சச்சின் (18 வருடம் 256 நாட்கள்), 2019ஆம் ஆண்டு ரிஷப் பந்த் (21 வருடம் 92 நாட்கள் ) ஆகியோர் உள்ளனர்.

நிதிஷ்குமாரின் மெய்டன் சதத்தை மெல்போர்ன் மைதானத்தில் இருந்து 80,000 ரசிகர்களும் எழுந்து நின்று கைகள் தட்டி வரவேற்றனர். அவர்களுடன் இருந்த நிதிஷின் தந்தையும் கண்கலங்கிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.

12 வயதிலேயே நிதிஷின் கிரிக்கெட் திறமையைக் கண்டு கொண்ட அவரது தந்தை, ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் தேர்வாளருமான எம்.எஸ்.கே.பிரசாத் பயிற்சி அகாடமியில் சேர்த்தார்.

நிதிஷ் குமாருக்குள் ஒரு ஆல்ரவுண்டர் இருப்பதை அங்கீகரித்த பிரசாத், ஆந்திர கிரிக்கெட் நிர்வாகத்திடம் அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் மாதந்தோறும் அவருக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.15,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிதிஷ்குமார், இன்று ஆஸ்திரேலியாவில் தனது முதல் சதத்தை பதிவு செய்து கிரிக்கெட் உலகை உற்றுநோக்க செய்துள்ளார்.

சச்சின் பாராட்டு!

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள எம்.எஸ்.கே.பிரசாத் “நிதிஷ், அவரது குடும்பத்தினர் மற்றும் எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும். ஒட்டுமொத்த நாடு மற்றும் ஆந்திர கிரிக்கெட்டில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த நிதிஷ், இந்த நிலையை எட்டுவதற்கு நிதிஷ் அபாரமாக உழைத்துள்ளார். அவரை ஆதரித்து அவருக்காக மகத்தான தியாகங்களைச் செய்த அவரது குடும்பத்தை நான் வணங்குகிறேன்,” என்று MSK பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் நிதிஷை பாராட்டி, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிதிஷின் பேட்டிங் என்றும் நினைவு கூறப்படும். முதல் டெஸ்டில் இருந்தே அவர் என்னைக் கவர்ந்தார். அதில் அவரது அமைதியும் குணமும் வெளிப்பட்டது. இன்று அவர் இந்தத் தொடரில் ஒரு முக்கியமான இன்னிங்ஸ் விளையாடுவதற்கு ஒரு உச்சநிலையை எட்டியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

போட்டி போட்டுப் பாத்துடுவோமா? ஐ.டி.விங் கூட்டத்தில் செந்தில்பாலாஜி போட்ட போடு!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தினமும் 10 முட்டை கொடுத்தாரா ஞானசேகர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share