சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 8வது நாளை இந்தியா அபாரமாக துவங்கியுள்ளது. காலையிலேயே, இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கங்களை வென்றுள்ளது.
மகளிருக்கான தனிநபர் கோல்ஃப் ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியாவின் அதிதி அசோக், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம், ஆசிய போட்டிகளில் கோல்ஃப் விளையாட்டில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற வரலாற்றை அதிதி அசோக் படைத்துள்ளார்.
இதை தொடர்ந்து, துப்பாக்கி சுடுதல் மகளிர் ட்ராப் (குழு) பிரிவில், இந்தியாவின் ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர் மற்றும் பிரீத்தி ராஜக் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இவர்களில், மனிஷா கீர் மகளிர் ட்ராப் தனிநபர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர்களை தொடர்ந்து, கைனான் செனாய், ஜொரோவர் சிங் மற்றும் பிரித்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ராப் (குழு) பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், இவர்களில் கைனான் செனாய் மற்றும் ஜொரோவர் சிங் ஆகியோர் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ராப் (தனிநபர்) பிரிவின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதன்மூலம், இன்று காலையிலேயே 3 பதக்கங்களை வென்ற இந்தியா, 11 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? – டிடிவி பதில்!