மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி வரும் 23ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
த்ரில் வெற்றி பெற்ற இந்தியா
இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்ற இந்தியா தனது கடைசி லீக் சுற்றில் அயர்லாந்து அணியை நேற்று (பிப்ரவரி 20) சந்தித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் அடித்தார்.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணி, 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை நிற்காமல் பெய்ததால் ஆட்டம் முடிந்ததாக அறிவித்த நடுவர்கள், டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
இந்த த்ரில் வெற்றியுடன் மகளிர் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை தொடர்ந்து 3வது அணியாக இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆதிக்கம்
மொத்தம் 10 அணிகள் மோதிய இந்த உலகக்கோப்பையில் ஏற்கெனவே இலங்கை, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரை விட்டு வெளியேறி விட்டன.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்களது பிரிவில் முதலிடத்தை பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து?
எனினும் ஏ பிரிவில் இருந்து அரையிறுதி செல்லும் மற்றொரு அணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. போட்டியை நடத்தி வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.
இன்று (பிப்ரவரி 21) நடைபெற இருக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பங்காளதேஷை சந்திக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இல்லாவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு சென்றுவிடும். எனவே இன்று நடக்கும் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடைசி லீக் : பாகிஸ்தானுடன் மோதும் இங்கிலாந்து
குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து அணி தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுள்ளது. இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது.
போட்டியின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், அரையிறுதியில் தன்னை எதிர்த்து விளையாடும் அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இங்கிலாந்து அணி வெற்றிக்காக கடுமையாக போராடும்.
குரூப் பி பிரிவில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்தியா.
முதல் அரையிறுதி போட்டி
அதன்படி வரும் 23ம் தேதி நடக்க இருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.
லீக் சுற்றுகளில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா.
அதே வேளையில் லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிக்கு எதிராக 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அதன்பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இடையே குறுக்கிட்ட மழையால் நூலிழையில் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஸ்மிருதி மந்தனா முதலிடம்
எனினும் வீரர்களின் தனிப்பட்ட ஆட்டங்களை பார்க்கும்போது இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணியாகவே கருதப்படுகிறது.
இந்த தொடரில் 149 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவராக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 146 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி உள்ளார்.
பந்துவீச்சில் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்தின் லீ டாகு மற்றும் ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.இந்தியாவின் ரேனுகா தாக்கூர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி 5வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த பந்துவீச்சில் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்த இந்தியாவின் ரேனுகா தாக்கூர் உள்ளார்.
இதனால் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் இடையே சமபலம் காணப்படுகிறது.
எனினும் இந்த லீக் தொடரில் தனது முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அணியை, சற்று தடுமாற்றத்துடன் ஆடி வரும் இந்திய அணி சமாளிக்குமா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான விடை தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் வைத்து 23ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
அடி மேல் அடி! துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்
உக்ரைனில் அமெரிக்க அதிபர் பைடன்: ரஷ்யா அதிர்ச்சி?