சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பதக்க எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 8வது நாளான இன்று மகளிருக்கான தனிநபர் கோல்ஃப் ஆட்டத்தில் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கமும், துப்பாக்கி சுடுதல் மகளிர் ட்ராப் (குழு) பிரிவில் வெள்ளிப் பதக்கமும், துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ராப் (குழு) பிரிவில் தங்கம் என மொத்தம் 3 பதக்கங்களை இந்தியா கைப்பற்றி இருந்தது.
தொடர்ந்து 3000 மீட்டர் ஸ்டீப்புல் சேஸ் போட்டியில் 8 நிமிடம் 19.54 விநாடிகளில் இலக்கை கடந்து இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்றார். இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 12-வது தங்கமாகும்.
தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டம் பிரிவில் ஜின்சன் ஜான்சன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், அஜய்குமார் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
மகளிர் 1,500 மீட்டர் ஓட்டம் பிரிவில் ஹர்மிலன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆடவர் குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் 20.36 மீட்டர் வீசி தங்கம் வென்றார்.
ஆடவர் நீளம் தாண்டுதலில் கேரள தடகள வீரர் ஸ்ரீசங்கர் முரளி 8.19 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் பேருந்து சேவை பாதிப்பு : ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
ஸ்ருதி ஹாசனின் “The Eye”: குவியும் விருதுகள்!