இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அவுட் சர்ச்சைக்கு இடையே அக்சர் – அஸ்வின் ஜோடி இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து இரண்டாவது நாளில் இன்று (பிப்ரவரி 18) பேட் செய்த இந்திய அணியின் முன்னனி வீரர்களான ரோகித் சர்மா(32), கே.எல்.ராகுல்(17), புஜாரா(0) மற்றும் ஸ்ரேயாஷ் அய்யர்(4) ஆகியோர் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சுழலில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
விராட் கோலி அவுட் சர்ச்சை
எனினும் 5வது விக்கெட்டுக்கு இணைந்த விராட்கோலி – ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து 59 ரன்கள் குவித்த நிலையில் ஜடேஜாவின்(26) விக்கெட்டை டோட் முர்பி பறித்தார்.
சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடி வந்த விராட் கோலியும் (44), ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் குன்னமென் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
பந்து பேட்டிலும், பேடிலும் ஒரேநேரத்தில் பட்டதால் விராட்கோலி டிஆர்எஸ் முடிவை எடுத்தார். ஆனால் மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க கோலி அதிர்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஐசிசி விதிப்படி பந்து ஒரே நேரத்தில் பேட்டிலும் பேடிலும் பட்டால் பந்து முதலில் பேட்டில் பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் விராட் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அவரை தொடர்ந்து ஸ்ரீகர் பரத்தும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அவுட் ஆக்கியதன் மூலம் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அப்போது இந்திய அணி 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அக்சர் – அஸ்வின் கூட்டணி அபாரம்
இந்நிலையில் தான் ஆல்ரவுண்டர்கள் அக்சர் பட்டேல் – அஸ்வின் கூட்டணி 114 ரன்களை குவித்து இந்திய அணியை கரை சேர்த்தது.
இவர்களின் கூட்டணியை அஸ்வின் (37) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பிரித்தார் ஆஸ்திரேலியாவின் கேப்டன் கம்மின்ஸ்.
அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வந்த அக்சர் பட்டேலின் (74) விக்கெட்டை முர்பி விழ்த்தினார். அவரை தொடர்ந்து ஷமியும் 2 ரன்களில் வெளியேற இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முன்னிலையில் ஆஸ்திரேலியா
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 1 ரன் முன்னிலையுடன் விளையாடக் களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸில் பயமுறுத்திய கவாஜாவை 6 ரன்களுடன் ஆரம்பத்திலேயே வெளியேற்றினார் ஜடேஜா.
தொடர்ந்து ஆடிய லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துகொண்டனர்.
ஆஸ்திரேலிய அணி 61 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிவுற்றது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்க அந்த அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் : மத்திய அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டிற்கு ரூ. 1201 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு!