கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளும் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக கேப்டன் ரோகித் சர்மாவும் மற்றும் காயம் காரணமாக தொடக்க வீரர் சுப்மன் கில் இருவரும் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அதன் காரணமாக கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் – கவாஸ்கர் தொடரை வென்றது. இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு 5 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்த நிலையில், பார்டர் – கவாஸ்கர் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”சிறந்த ஃபார்மில் உள்ள சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட டெஸ்ட் தொடர் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.
வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இரண்டு பிரதான சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடி பயனில்லை.
முதல் இரண்டு போட்டிகளில் நிதீஷ் ரெட்டியை பயன்படுத்தலாம். அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர். முதல் இரண்டு போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவது அணி சமபலத்துடன் இருப்பதை உறுதி செய்யும்” என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Maharastra Election : ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி… சிக்கிய பாஜக பொதுச் செயலாளர்!