டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று (ஜூலை 4) பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸ் நகரில் திடீரென புயல் உருவானது. இதனால், இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர், மேற்கிந்திய தீவுகளில் இருந்து தனிவிமானம் மூலம் இந்திய அணியின் வீரர்கள் இன்று (ஜூலை 4) காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
பிரதமருடன் சந்திப்பு
இதையடுத்து, டெல்லியில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியை இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சிராஜ், அக்சர் பட்டேல் உள்ளிட்ட அனைத்து இந்திய அணி வீரர்களும் மற்றும் பிசிசிஐ செயலர் ஜெய்ஷாவும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர்.
இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோது பிரத்யேக ஜெர்சியை அணிந்திருந்தனர். பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அணிந்து கொள்ளும் ஜெர்சிக்கு பதிலாக பெரிய எழுத்துகளில் சாம்பியன் என்று பொறிக்கப்பட்டிருந்த ஜெர்சியை அணிந்து பிரதமர் மோடியை சந்தித்தனர்.
அதன் பின்னர், உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். அத்துடன், வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் உணவருந்தினார்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். அப்போது, “இன்று, நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் உங்களின் செயல்திறனைக் கண்டு பெருமை கொள்கின்றனர். விளையாட்டு உலகில், நீங்கள் உலகக் கோப்பையை வென்றுள்ளீர்கள்.
அதேபோல், இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும், ஒவ்வொரு தெருவிலும் உள்ள எண்ணற்ற இதயங்களையும் நீங்கள் வென்றுள்ளீர்கள்.
இந்த இறுதிப்போட்டி என்றென்றைக்கும் நினைவுகூரப்படும். நீங்கள் பல நாடுகளைச் சேர்ந்த பல அணிகளுக்கு எதிராக விளையாடினீர்கள். இந்திய வீரர்களாகிய நீங்கள் உலகக்கோப்பையை வென்றது சிறிய சாதனை அல்ல. இந்த வெற்றி மூலம் நீங்கள் கோடான கோடி இதயங்களை வென்றுள்ளீர்கள்” என்று பிரதமர் மோடி இந்திய வீரர்களிடம் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ்வலைதளப் பக்கத்தில், “சாம்பியன்களுடன் ஓர் சந்திப்பு” என மோடி பதிவிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சஹல் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக நிர்வாகி கொலை.. உறவினர்கள் போராட்டம் : எடப்பாடி கண்டனம்!
இதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்: மாளவிகா ஓபன் டாக்!