இந்திய அணி ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்றதை அடுத்து சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ஜிம்பாவேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அபாரமாக தொடரை கைப்பற்றியது.
வெற்றியுடன் தொடங்குவாரா கம்பீர்?
தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளாராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அறிவிக்கப்பட்டார். அவர் வரும் 27 ஆம் தேதி தொடங்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடர் முதல் இந்திய அணியை வழி நடத்த உள்ளார்.
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் சாம்பியன் கோப்பையுடன் நிறைவடைந்த நிலையில், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள கம்பீருக்கு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வெற்றியுடன் சாம்பியன் அணியை வழிநடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அணி வீரர்கள் விவரம்!
ஒருநாள் அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
முன்னதாக டி20 உலகக்கோப்பை போட்டியை தொடர்ந்து மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் கம்பீர் கேட்டுக்கொண்டதன் பேரில் ரோகித், கோலி இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
மேலும் சிறிதுகால ஓய்வுக்கு பின் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், முகமது சிராஜ் ஆகியோர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ‘தொடர் நாயகன்’ விருது வென்ற வாஷிங்டன் சுந்தர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என 2 அணிகளிலும் இடம் பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வே தொடரில் சரியாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கடந்த ஒரு ஆண்டாக உள்ளூர் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய ரியான் பராக்கிற்கு, மீண்டும் டி20 மற்றும் ஒருநாள் என 2 அணிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் ஹர்ஷித் ராணாவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாத்திற்கு இந்த தொடரில் இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.
அதே போன்று, இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs இலங்கை அட்டவணை:
முதல் டி20 – ஜூலை 27
2வது டி20 – ஜூலை 28
3வது டி20 – ஜூலை 30
முதல் ஒருநாள் – ஆகஸ்ட் 2
2வது ஒருநாள் – ஆகஸ்ட் 4
3வது ஒருநாள் – ஆகஸ்ட் 7
– மகிழ், கிறிஸ்டோபர் ஜெமா
ED வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு : செந்தில் பாலாஜியை ஆஜர்ப்படுத்த உத்தரவு!