ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு காத்திருக்கும் மூன்று முக்கிய சவால்கள்!

விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு எந்த அளவிற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறதோ அதே போல் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கும் ஆதரவு இருக்கிறது.

வரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் மிக பிரமாண்டமாக நடைபெறவிறுக்கிறது. அதற்காக வரும் டிசம்பர் 23 ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்தில் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 405 கிரிக்கெட் வீரர்கள் களமிறங்குகின்றனர்.

பொதுவாக ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முதலில் ஏலத்தில் திறம்பட செயல்பட்டு தரமான வீரர்களை சரியான விலையில் வாங்குவது அவசியமாகும். அந்த வகையில் 4 கோப்பைகளை (2010, 2011, 2018, 2021) ஆம் ஆண்டுகளில் வென்று 2-வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறவில்லை.

அதனால் அடுத்த வருடம் (2023) சாம்பியன் பட்டம் வெல்ல இம்முறை நடைபெறும் ஏலத்தில் உன்னிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. குறிப்பாக ப்ராவோ, உத்தப்பா போன்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கு பதிலாக தகுதியான மாற்று வீரர்களை இந்த ஏலத்தில் வாங்க வேண்டிய சவாலான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது போக இந்த ஏலத்தில் சென்னை அணிக்கு காத்திருக்கும் 3 முக்கியமான சவால்களை இங்கே காணலாம்:

வேகப்பந்து வீச்சாளர்கள்

ப்ராவோ இல்லாத நிலையில் கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களை ஏலத்துக்கு முன்பாக விடுவித்துள்ள சென்னை அணி தீபக் சாஹரை மட்டுமே நம்பியுள்ளது.

அதனால் தற்சமயத்தில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலவீனமாக இருக்கிறது. எனவே அதை சரி செய்ய தரமான வேகப்பந்து வீச்சாளர்களை ஏலத்தில் வாங்க வேண்டிய கட்டாயமும் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஏலத்தில் ரிலீ மெரிடித் போன்ற அனுபவமற்ற ரன்களை வாரி வழங்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பெரும்பாலும் உள்ளார்கள். மற்றவர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் தக்க வைத்துள்ளன.

மறுபுறம் மெரிடித், சீன் அபோட் போன்ற அதிரடியான வேகத்தில் வீசினாலும் ரன்களை வாரி வழங்கும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை எப்போதுமே சென்னை விரும்புவதில்லை. அந்த நிலையில் கையிலிருந்த தரமான ஆடம் மில்னேவை விட்டுவிட்டு இன்னும் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை ஏலத்தில் அந்த அணி எப்படி வாங்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாரமாகும் தீபக் சாஹர்

2018 முதல் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய தீபக் சாஹர் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலராக வரலாறு படைத்து அசத்தினார்.

Indian Premier League chennai super kings

அதன் காரணமாக இந்த வருடம் 14 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை நிர்வாகம் தக்க வைத்த இவர் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார். அதன் பின்பும் மீண்டும் மீண்டும் காயமடைந்து வரும் இவர் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவராக உள்ளார்.

மேலும் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களை குவிக்கும் திறமை பெற்றிருந்தாலும் 30 வயதாகும் இவர் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக்கூடியவராக உள்ளார். ஆனால் அடிக்கடி காயமடைவதுடன் தற்போது சுமாரான ஃபார்மில் உள்ள இவருக்காக 14 கோடி என்ற பெரிய தொகையை சென்னை செலவிட்டுள்ளது. அதன் காரணமாகவே ப்ராவோ இல்லாத நிலையில் வேறு தரமான வேகப்பந்து வீச்சாளரை பெரிய தொகையை செலவழித்து வாங்குவதற்கு யோசிக்க வேண்டிய அந்த அணி நிர்வாகம் சிக்கலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுட்டிக் குழந்தை சாம் கரண்

2019இல் அறிமுகமாகி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த போதிலும் அருமை அறியாத பஞ்சாப் நிர்வாகம் இங்கிலாந்தின் சாம் கரணை கழற்றி விட்டது. ஆனால் அவரது அருமையை உணர்ந்து சென்னை நிர்வாகம் 2020 சீசனில் குறைந்த விலைக்கு வாங்கியது. அதில் சுட்டிக்குழந்தை என்று தமிழக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் கடந்த வருடம் பாதியில் காயமடைந்து வெளியேறினார்.

Indian Premier League chennai super kings

அதனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்காத அவர் 2022 டி20 உலக கோப்பையில் பைனலில் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் வென்று இங்கிலாந்து 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக திடீரென்று தங்கமாய் மதிப்பு எகிறியுள்ள அவரை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் போட்டி போடும் வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் வெறும் 20.45 கோடியை மட்டும் கையிருப்பு தொகையாக வைத்துள்ள சென்னை நிர்வாகம் எப்படி வாங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சர் சக்கரபாணி

டிஜிட்டல் திண்ணை: தொகுதி மாறுகிறாரா திருமாவளவன்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *