இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை ( செப்டம்பர் 23 ) நடைபெறவுள்ளது. முதல் டி20 போட்டியில் மோசமான தோல்வியை பெற்றதால், இந்திய அணியின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.
கடந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் மோசமான ஃபீல்டிங் தான் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார். கே.எல்.ராகுல், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் என மூன்று பேருமே சுலபமான கேட்ச்-களை கூட தவறவிட்டனர்.
பொதுவாகவே அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அனைத்து வீரர்களாலும் சிறப்பாக செயல்பட முடியாது.
ஆனால் கைக்கு வரும் கேட்ச்களை பிடித்து சிறப்பாக பீல்டிங் செய்வது ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் கடமை.

’கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்’ என வல்லுநர்கள் தினந்தோறும் தெரிவித்தாலும் அதில் முன்னேறாத இந்தியா சமீப காலங்களில் இது போன்ற முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டு கையிலிருந்த வெற்றிகளை தவறு விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.
உலக கோப்பையை வெல்ல முடியாது
இதனால் பீல்டிங்கில் முன்னேறாமல் உங்களால் உலக கோப்பையை வெல்ல முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாகவே விமர்சித்தார்.
இந்நிலையில் , இந்தியா போன்ற அதிக சம்பளம் கொடுக்கப்படும் அணியில் சில வீரர்கள் அதிகப்படியான எடையை கொண்டிருப்பதே சுமாரான பீல்டிங்க்கு காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள்
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர் “உலகிலேயே இந்திய வீரர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். அவர்கள் அதிகப்படியான போட்டியில் விளையாடுகின்றனர்.
இருப்பினும் அவர்கள் ஏன் ஃபிட்டாக இருப்பதில்லை என்று சொல்லுங்கள்? அவர்களின் உடல் அமைப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் மிகவும் சிறப்பாக உள்ளன’ என்று கூறியுள்ளார்.

அதிகப்படியான உடல் எடை
அத்துடன் இந்தியாவை விட சில ஆசிய அணிகள் உடல் தகுதியில் சிறப்பாக உள்ளதென்று நான் சொல்வேன்.
சில இந்திய வீரர்கள் அதிகப்படியான உடல் எடையைக் கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் அதில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஏனெனில் அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்.
விராட் கோலி ஃபிட்டாக உள்ளார்
இது பற்றி மற்றவர்கள் பேசுவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்திய அணியில் பிட்னஸ் சுமாராகதான் உள்ளது.

குறிப்பாக சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்யும் அளவுக்கு ஃபிட்டாக இல்லை.
விராட் கோலி ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஃபிட்டாக உள்ளனர் ஆனால் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் அதில் மந்தமாக உள்ளனர்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்