நடப்பாண்டு இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் காலிறுதி போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நேற்று (ஜூன் 13) தொடங்கிய இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்றைய முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர்கள், எச்.எஸ்.பிரணாய், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி, சாத்வீக் சாய்ராஜ், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
தொடர்ந்து இன்று (ஜூன் 14) உலக தரவரிசையில் 20வது இடத்தில் இருக்கும் லக்ஷயா சென் முதல் சுற்று 8வது இடத்தில் இருக்கும் மலேசிய வீரர் லீ ஜி ஜியாவை எதிர்கொண்டார்.
லக்ஷயா சென் 33 நிமிடங்களில் 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மலேசிய வீரரை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் 22வது இடத்தில் இருக்கும் கிடம்பி ஸ்ரீகாந்த் சீன வீரர் லு குவாங் ஜூவை எதிர்கொண்டார்.
கிடம்பி ஸ்ரீகாந்தும் 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள 2வது சுற்றில் இந்திய வீரர்களான லக்ஷயா சென் மற்றும் கிடம்பி ஸ்ரீகாந்த் இருவரும் மோத உள்ளனர். 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ள மற்ற வீரர்களும் நாளைய போட்டியில் விளையாட உள்ளனர்.
மேலும், இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய ஆகர்ஷி காஷ்யப் 10-21, 4-21 என்ற நேர் செட்டில் தென்கொரிய வீராங்கனையிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார்.
மோனிஷா