புதிய வரலாறு: இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்… ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

விளையாட்டு

உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் கால் இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் நேரடியாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

ஆனால் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆண்கள் அணி 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவுடன் தோற்று வெளியேறியது.

இதேபோல இந்திய பெண்கள் அணி 1-3 என்ற கணக்கில் சீன தைபேயிடமும் தோற்று வெளியேறியது. இதனால் நேரடியாக இரு அணிகளும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.

இந்த நிலையில் தற்போது இந்திய அணிகள் உலக தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

புதிய உலக தரவரிசையின்படி ஆண்கள் பிரிவில் சுலோவேனியா 11-வது இடத்திலும், குரோஷியா 12-வது இடத்திலும், இந்தியா 15-வது இடத்திலும் உள்ளன.

பெண்கள் பிரிவில் தாய்லாந்து 11-வது இடத்திலும், போலந்து 12-வது இடத்திலும், இந்தியா 13-வது இடத்திலும், சுவீடன் 15-வது இடத்திலும் உள்ளன.

இதற்கிடையில் சுலோவேனியா, குரோஷியா, தாய்லாந்து , போலந்து,  இந்தியா நாடுகள் பாரிஸ்  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன என, சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று (மார்ச் 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்திய அணி தேர்ச்சி பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதுகுறித்து இந்திய அணியின் ஆண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் மூத்த வீரர் சரத் கமல் தனது எக்ஸ் பக்கத்தில், ”இறுதியாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுதான் எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. இது எனது 5-வது ஒலிம்பிக் தொடர் என்றாலும், ஆண்கள் பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்த பெண்கள் அணிக்கும் எனது  பாராட்டுகள்”, என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது, வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

-மாணவ நிருபர் கவின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பாஜகவின் தேர்தல் பத்திர ரகசியங்கள்..தேர்தலுக்கு முன்பு வெளியிட முடியாது..SBI சொல்வதன் பின்னணி என்ன?

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0