ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்ற இந்தியா பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 92 பதக்கங்கள் பெற்று இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஆடவருக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜப்பானும், இந்தியாவும் மோதின. தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் வியூகத்தை இந்திய அணி கையிலெடுத்தாலும், முதல் 15 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
எனினும் ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அனுபவ முன்கள வீரரான மன்பிரீத் சிங், 25 வது நிமிடத்தில் சக்திவாய்ந்த ரிவர்ஸ் ஃபிளிக் ஷாட் மூலம் முதல் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்று தந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஹர்மன்ப்ரீத் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். அவரைத்தொடர்ந்து 36 வது நிமிடத்தில் இந்தியாவுக்கான 3வது கோலை அடித்தார் அமித் ரோஹிதாஸ்.
தொடர்ந்து 48வது நிமிடத்தில் அபிஷேக் 4வது கோல் அடிக்க, ஜப்பான் அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.
அதற்கு பதிலடியாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை சரியாக பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் தனது இரண்டாவது கோலை அடித்தார்.
இதன்மூலம் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 1966, 1998, 2014 ஆண்டுக்கு பிறகு 4வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்திய அணி. இந்த அபார வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதிபெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தாயாக மாறிய நானி… ’ஹாய் நான்னா’ புது பாடல் ரிலீஸ்!
”ரோகிணி தியேட்டர் சேதம்… போலீஸ் காரணம்”: நீதிபதிக்கு அரசு தரப்பில் விளக்கம்!