வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி : மோடி, ராகுல் வாழ்த்து… பரிசு அறிவிப்பு!

Published On:

| By christopher

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

இதில் கேப்டன் ஹர்மன் பிரித் சிங் தனக்கு கிடைத்த 2 பெனால்டி கார்னர்களையும் கோலாக மாற்றி அசத்தினார். அதேபோல் ஸ்பெயின் அணியின் அதிரடியான அத்தனை கோல் திருப்பங்களையும் இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக தடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனையடுத்து இந்திய ஹாக்கி அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், “பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது ஹாக்கி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா ஹாக்கி அணி தொடர்ச்சியாக மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்திய ஹாக்கி அணி மிக உயர்ந்த பாராட்டுக்கு உரியது. அவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த அணி காட்டும் நிலைத்தன்மையும், திறமையும், ஒற்றுமையும், போராடும் குணமும் நமது இளைஞர்களை ஊக்குவிக்கும்” என முர்மு தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் வெற்றியை ’தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் சாதனை’ என குறிப்பிட்ட பிரதமர் மோடி, “இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை தாய்நாட்டிற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

அவர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வின் வெற்றி. அவர்கள் மகத்தான துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் காட்டினார்கள். வீரர்களுக்கு வாழ்த்துகள்.

ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் இந்த சாதனை நமது தேசத்தின் இளைஞர்களிடையே விளையாட்டை மேலும் பிரபலமாக்கும்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்த்து செய்தியில், “இந்திய ஹாக்கி அணியின் அற்புதமான ஆட்டம் – நீங்கள் அனைவரும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் ????

நன்றி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். உன்னதத்திற்கான உங்கள் இடைவிடாத அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது” என ராகுல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தியா ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்த பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், ”ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தாமதம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

”வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்” : எடப்பாடி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel