கராச்சி மைதானத்தில் இந்திய கொடி புறக்கணிப்பா?

Published On:

| By Kumaresan M

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி ஆடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா , ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டிஸ், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன.

இந்த நிலையில், புனரமைக்கப்பட்ட கராச்சி மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது, அனைத்து நாட்டு கொடிகளும் மைதானத்தில் ஏற்றப்பட்டன. இந்தியாவின் கொடி மட்டும் ஏற்றப்படவில்லை. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்து விட்டது. இதன் காரணமாக இந்திய கொடியை மைதானத்தில் ஏற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இந்திய அணியை புறக்கணிக்கும் எந்த ஒரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளம்பர பதாகைகளில் இந்திய அணியின் கேப்டன் உட்பட அனைத்துக் கேப்டன்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக்கில் துபாயில் தனது முதல் ஆட்டத்தில் 20 ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்தை சந்திக்கிறது. 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும் சந்திக்கிறது. கடைசியாக நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில்தான் நடைபெறும். இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அதையும் நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்து விடும். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share