இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரும், பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனுமான ஷிகர் தவானுக்கு, அவரது மனைவி ஏஷா முகர்ஜியிடம் இருந்து டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
ஷிகர் தவானுக்கு ஏஷா முகர்ஜி மனரீதியாக மிகுந்த துன்புறுத்தல் அளித்ததாக மேற்கோள் காட்டி, நீதிபதி ஹரிஷ் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், கடந்த 2012 ஆம் ஆண்டு ஏஷா முகர்ஜியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஸோராவர் என்ற மகன் உள்ளார்.
ஏஷா முகர்ஜிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருடன் திருமணமாகியுள்ளது. அவர்களுக்கு, 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், அந்த நபருடனான திருமண உறவை முறித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவில் வசிப்பதாக உறுதியளித்தே, ஷிகர் தவானை ஏஷா முகர்ஜி மணம் முடித்துள்ளார்.
ஆனால், அதற்கு எதிர்மறையாக தனது முன்னாள் கணவருடன் மீண்டும் ஏற்பட்ட நெருக்கத்தாலும், தனது 2 மகள்களுக்காகவும், ஏஷா முகர்ஜி தனது மகன் ஸோராவருடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பியுள்ளார்.
வருட கணக்கில் தனது மகனை பிரிந்து வாழும் சூழலுக்கு தள்ளப்பட்ட ஷிகர் தவான், இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.
மேலும், சில ஐ.பி.எல் அணி உரிமையாளர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும், இந்தியாவில் இயங்கி வரும் சில கிரிக்கெட் வாரியங்களுக்கும், ஷிகர் தவானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன், செய்திகள் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தவானுக்கு சொந்தமான பணத்தில், அவரை வற்புறுத்தி ஆஸ்திரேலியாவில் தன் பெயரில் ஏஷா முகர்ஜி சொத்துக்களை வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த காரணங்களை கூறி, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரிஷ் குமார், தவானின் வாதங்களை ஏற்றுக்கொண்டு அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ளார்.
மேலும், கல்வியாண்டின் விடுமுறை காலங்களில், குறைந்தபட்சம் பாதி விடுமுறை நாட்களை ஸோராவர் தனது தந்தை ஷிகர் தவான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செலவிடும் வகையில், அவரை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் எனவும் ஏஷா முகர்ஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக, ஆஸ்திரேலியாவுக்கு சென்று தனது மகனை ஷிகர் தவான் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ள நீதிமன்றம், இருவரும் வீடியோ காலில் உரையாட அனுமதிக்க வேண்டும் எனவும் ஏஷா முகர்ஜிக்கு உத்தரவிட்டுள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் நூற்றாண்டு: ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம்!
அறிமுகமானது ‘Google Pixel 8’ ஸ்மார்ட்போன்கள்: விலை எவ்வளவு தெரியுமா?