தாதா கங்குலியின் கிரிக்கெட் தருணங்கள்!

Published On:

| By Gracy

இன்று (ஜூலை 8) தாதா சவுரவ் கங்குலியின் 50வது பிறந்த தினம்…

இன்றும் பழம்பெருமை வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் ஏதேனும் போட்டி நடந்தால், டிவியில் அதன் பால்கனி காட்டும்வரை உன்னிப்பாக கவனிப்பவர்கள் இருப்பார்கள். அந்த பால்கனியை பார்த்தால், யாராலும் சட்டையைக் கழற்றி சுற்றிய அந்த ஆக்ரோசமான தாதா கங்குலியையும் நினைக்காமல் இருக்க முடியாது. ஆம் அந்த ரோசம் தான்… அதனை இந்திய அணிக்குள் கடத்தியவர் தான் தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கங்குலி.

ஆனால் அதையும் தாண்டி வீரன், கேப்டன் என பல முகங்களும் உண்டு. அவரைப் பற்றி பேச பல சாதனைகளும் இருக்கிறது. தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் சவுரவ் கங்குலியின் மிகச் சிறந்த டாப் 5 கிரிக்கெட் தருணங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

’வேற மாறி’ ரீ எண்ட்ரி….

கொல்கத்தாவின் இளவரசன் என்ற அடைமொழியுடன் 1992ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானார் கங்குலி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதல் போட்டியில் வெறும் 3 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அடுத்த போட்டிகளில் 12ஆவது மேனாக அமர்த்தப்பட்டார். பெரும் கனவுடன் வந்தவரை, வீரர்களுக்கு குளிர்பானம் எடுத்து கொடுக்க சொல்ல, கடுப்பான கங்குலி மறுத்துவிட்டார். அதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவ்வாறு முதல் போட்டியிலேயே சர்ச்சையுடன் தொடங்கியது கங்குலியின் பயணம். பின்னர் 4 ஆண்டுகள் கழித்து 1996ஆம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணியில் கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தார். அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தனது ரீ எண்ட்ரியை சத்தமாக பதிவு செய்தார். அதே தொடரின் அடுத்த போட்டியிலும் சதம் அடிக்க, மொத்த கிரிக்கெட் உலக கவனத்தையும் ஈர்த்தார்.

ஆல்ரவுண்டராக மாற்றிய சஹாரா

அதனைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவரின் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது சஹாரா கோப்பைத் தொடர். பாகிஸ்தானுக்கு எதிரான அந்த ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது. அதில் ஆல் ரவுண்டராக ஜொலித்து தொடர்ந்து நான்கு முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார் கங்குலி. 25 ஆண்டுகள் ஆன போதும் இன்றுவரை அந்த சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது என்பது அவரது திறமைக்கு காலம் அளித்துள்ள சான்று.

’ஓ’ போட வைத்த ஓப்பனிங் ஜோடி

1999ஆம் ஆண்டு முதன்முறையாக லண்டனில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றார். அந்த தொடரில் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி மோசமாக விளையாடியது. இருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் 318 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் எடுத்த முதல் ஜோடி என்ற சாதனை படைத்தது.

கங்குலி மட்டும் 158 பந்துகளில் 17 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உட்பட 183 ரன்கள் அடித்து அமர்க்களப்படுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி துவக்க ஜோடியாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன் சேர்ந்து 136 இன்னிங்ஸ்களில் 6609 ரன்களை குவித்தது இன்றளவும் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

லார்ட்ஸ் உனக்குனா… வான்கடே எனக்கு…

2000ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் சூதாட்டம் என புயல் வீச, அதில் அசாருதீன் உட்பட பலரும் அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பலமிக்க வீரர்களை எல்லாம் இழந்த அசாதாரண சூழ்நிலையில் தான் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் கங்குலி. அதுமுதல் அமைதி படையாக இருந்த இந்திய அணியை ஆக்ரோசமிக்க படையாக உருமாற்றினார். அதற்கு தன்னையே முன்மாதிரியாக்கிய சம்பவம் தான் இங்கிலாந்து அணியுடனான நாட் வெஸ்ட் சீரிஸ்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அதன் ஃபைனலில் இந்திய அணி 325 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றது. அப்போது தான் கங்குலி தன் ஜெர்ஸியை கழற்றி மொத்த ஸ்டேடியத்தையே அதிர வைத்தார். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் “கிரிக்கெட்டின் ‘மெக்கா’வான லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் சட்டையைக் கழற்றி சுற்றியது சரியா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சற்றும் தயங்காத கங்குலி “உங்களுக்கு லார்ட்ஸ் என்றால் எங்களுக்கு மும்பை வான்கடே மைதானம். அங்கு உங்கள் அணியினர் சட்டையைக் கழற்றி சுற்றியது ஏன்?” என்று நெத்தியடியாக பதில் கேள்வி கேட்க, எதிர்க்கூட்டத்தில் அமைதியோ அமைதி!

உலகக்கோப்பையில் இந்திய அணி

தான் கேப்டனாக பொறுப்பேற்ற சில வருடங்களிலேயே தரமான இந்திய அணியை உருவாக்கினார். 2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் தோற்றவுடன் வீரர்களின் வீடுகளுக்கு கற்கள் பறந்தன. வீரர்கள் கட் அவுட்கள் சாய்க்கப்பட்டன. ஆனால் சற்றும் உணர்ச்சிகளுக்கு இடறி விழாமல், அதன்பிறகு அனைத்து போட்டிகளிலும் வென்று அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதில் தோற்றாலும் கடைசி வரை போராட்ட குணத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு அச்சாணியாக இருந்தார் கங்குலி.

அதுமட்டுமல்ல, கேப்டனாக இந்திய அணிக்கு அவரது பங்களிப்பு என்பது முக்கியமானது.

* இந்திய அணியில் யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், ஜாஹீர்கான், ஹர்பஜன் சிங், ஆஷிஸ் நெஹ்ரா, ஏன் தோனி உட்பட பல வெற்றி வீரர்களை இந்திய அணியில் அறிமுகப்படுத்தியவர் கங்குலி.

* தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி கலக்கி கொண்டிருந்த போதும், அணியின் நலனுக்காக அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கிற்கு அந்த இடத்தை விட்டுக்கொடுத்தவர் கங்குலி.

* உள்ளூர் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற பெயரை மாற்றி, வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணியின் வெற்றிக்கொடியை பறக்கவிட்டவர் கங்குலி.

* டிராவிட்டுக்கு கீப்பிங், தோனிக்கு ஒன் டவுன் என வீரர்களின் திறமையை மிகச்சரியாக கணித்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து மெருகேற்றியவர்.

* கொல்கத்தாவின் இளவரசராக அறிமுகமானாலும், இன்று விருட்சமாய் எழுந்து நிற்கும் இந்திய அணிக்கு விதை போட்டவர் கங்குலி. இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

இப்படி எத்தனையோ எண்ணற்ற மாற்றங்களை இந்திய அணியில் கொண்டு வந்தவர் இந்த தாதாவை இந்தியா… இந்திய அணி என்றும் கொண்டாடும்.

– கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel