கனவுகளைத்தேடி எல்லோரும் ஓடுவார்கள் ஆனால் அதை ஒரு சிலர் தான் அடைவார்கள். அப்படி வெற்றியை தன் வசப்படுத்துபவர்கள் மற்றவர்களுக்கு உந்து சக்தியாக இருப்பார்கள்.
அவர்களை இந்த உலகம் கொண்டாடித் தீர்க்கும். ஆனால் அந்த இடத்தை அவர்கள் அடைவதற்கு பட்ட கஷ்டங்கள் யாருக்கும் தெரியாது. அப்படி தன் வாழ்க்கையை ஒரு துப்புரவு பணியாளராக தொடங்கி இன்று இந்தியா முழுவதும் அனைவரும் கொண்டாடும் கிரிக்கெட் வீரராக உருவாகி இருக்கும் ரிங்கு சிங் பற்றி பார்ப்போம்…
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளியின் 5 குழந்தைகளில் ஒருவராக அக்டோபர் 12 , 1997 ஆம் ஆண்டு பிறந்தவர் ரிங்கு சிங். சிறு வயதில் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததும் தந்தைக்கு உதவியாக கேஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு போய் டெலிவரி செய்யும் வேலையை அவர் செய்து வந்துள்ளார்.
இடையில் கிரிக்கெட் விளையாடச் சென்றால் அவ்வளவு தான் கிரிக்கெட் பேட்டில் பந்து அடி வாங்குவதைப்போல்…ரிங்கு சிங் தந்தையிடம் அடி ,உதை வாங்குவார்.
இது குறித்து ரிங்கு சிங் அளித்த பேட்டி ஒன்றில், இப்படி கூறியிருப்பார், “வேலையில்லாத நேரத்தில் மட்டுமே நான் கிரிக்கெட் விளையாடச் செல்ல வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பம். அதனால், நான் கிரிக்கெட் விளையாடச் செல்வது, அதற்காக வீட்டில் திட்டு வாங்கி, உதைபடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
வீட்டிற்கு வந்ததும் என்னை அடித்து உதைக்க வேண்டும் என்றுதான் என் தந்தை எண்ணுவார். ஆனால் என் சகோதரர்கள் எனக்கு ஆதரவாக வருவார்கள். கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கைவிடாமல் அதனைத் தொடரச் செய்தது அவர்கள்தான். கிரிக்கெட் பந்து வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சில நல்ல உள்ளங்கள் எனக்கு உதவி செய்தார்கள்” என்று சொல்லியிருப்பார்.
இவரது தந்தை அலிகாரில் உள்ள பல தொழிலதிபர்களின் வீடுகளுக்கு சிலிண்டர்களை டோர் டெலிவிரி செய்து வந்தாலும் அவரிடம் சொந்தமாக ஒரு பைக் கூட இல்லையே என்ற வருத்தம் ரிங்கு சிங்கிற்கு அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் தான் உள்ளூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் சிறப்பாக விளையாடியதற்காக மோட்டர் பைக் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. உடனே தனக்கு பரிசாக கிடைத்த அந்த பைக்கை தன்னுடைய தந்தைக்கு பரிசாக அளித்துள்ளார்.
மெல்ல மெல்ல ரிங்கு சிங்கின் மீது நம்பிக்கை வர பிறகு கிரிக்கெட் மீதான அவரது ஆர்வத்தையும், கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு அவருக்கிருந்த வாய்ப்புகளையும் புரிந்து கொண்டனர் குடும்பத்தினர். ஆனால் குடும்பமும் பொருளாதாரச் சிக்கலில் உழன்று கொண்டே இருந்ததால் அவரது கனவை நனவாக்க பெரிய அளவில் அவர்களால் உதவ முடியவில்லை.
ஒரு கட்டத்தில், குடும்பத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர வேண்டிய நிர்பந்தம் ரிங்குசிங்கிற்கு ஏற்பட்டுள்ளது. வேலைக்கான தேடல், ஒரு கோச்சிங் சென்டரில் துப்புரவுப் பணியில் போய் சேர்ந்துள்ளார் ரிங்கு சிங். இது குறித்த நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார்.
”பயிற்சி நிறுவனம் ஒன்றில் தளத்தை சுத்தம் செய்யும் துப்புரவாளர் பணி கிடைத்தது. தினமும் அங்கு காலையில் சென்று தரையை சுத்தம் செய்ய வேண்டியது என் வேலை. என் சகோதரன் மூலமாக எனக்கு அந்த வேலை கிடைத்தது. அந்த வேலையில் தொடர எனக்கு விருப்பம் இல்லை என்பதால் வேலையை விட்டுவிட்டேன்.
அது சரியான முடிவு என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், படிப்பில் நான் மிகவும் சுமார் ரகம். அதனால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தீர்மானித்தேன். ஏனெனில், என் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல கிரிக்கெட்டில் தேர்வதே முக்கியம் என்று நினைத்தேன்” என்கிறார் ரிங்குசிங்.
கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தாலும் அதற்கான வழி என்னவென்று ரிங்கு சிங்குவிற்கு தெரியவில்லை. 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் தேர்வாக என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாத அவர் இதனால் 2 முறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான், அலிகாரைச் சேர்ந்த முகமது ஜீஷன் அவருக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
அலிகாரைச் சேர்ந்த மசூத் அமின் என்பவர்தான் ரிங்குவை சிறு வயது முதலே வழிநடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேச லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16 வயதில் அறிமுகமாகி அந்த போட்டியில் 83 ரன்கள் அடித்தார் ரிங்கு. பின்னர், நவம்பர் 2016-2017 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி டிராபியில் உத்தரபிரதேச மாநிலத்திற்காக 10 போட்டிகள் விளையாடி 953 ரன்கள் எடுத்துள்ளார்.
இப்படி நாட்கள் நகர கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவரது பெயர் உலகிற்கு தெரியவந்தது. அதுவரையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ரிங்கு சிங் ஐபிஎல் போட்டிகளில் ஏலம் எடுக்கப்பட்டார். பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 80 லட்சம் ரூபாய்க்கு இவரை வாங்கியது.
பின்னர், ஐ.பி.எல்.லில் விளையாடத் தேர்வான அவருக்கு வீட்டில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில், அவ்வளவு பணத்தை அவரது வீட்டில் இதற்கு முன்பு யாரும் பார்த்திருக்கவில்லை. அத்துடன் அவர்களது பொருளாதார பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.
இந்நிலையில் தான் எப்படியும் வெற்றிபெற்று விட வேண்டும் என்ற தனது கனவை விடாமல் துரத்திய ரிங்கு சிங், நடப்புத் தொடரில் அதனை நனவாக்கியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 9 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல்லின் 13 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்து ரிங்கு சிங்கை பேட்டிங் முனைக்கு அனுப்பினார்.
பின்னர் நடந்தவற்றை டிவி, மொபைலில் கிரிக்கெட்டை பார்த்து கொண்டிருந்தவர்களும் மைதானத்தில் நேரடியாக பார்த்து கொண்டிருந்தவர்களும் கூட நினைத்து பார்க்காத அற்புதம் நடந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தினார் ரிங்கு சிங்.
அடுத்த 5 பந்துகளையும் வரிசையாக சிக்சருக்கு அனுப்பி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு அவர் அசாத்திய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு ரஞ்சிக் கோப்பையில் ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார்.
யுவராஜ், கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோரது 6 பந்தில் 6 சிக்சர் என்ற சாதனையையும் தாண்டி ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் கூட அடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த சாதனைக்கு சொந்தக்காரரான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் தனக்கு கிடைத்த நோபாலையும் சிக்சருக்கு அனுப்பி சாதித்திருந்தார். ஆனால், இவை அனைத்துமே ஒரு இன்னிங்சின் நடுவே கிடைத்த ஓவர்களில் அடிக்கப்பட்டவை.
சேஸிங்கின் போது, கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளை தொடர்ச்சியாக சிக்சராக்கிய வகையில்தான் ரிங்கு சிங் சிங்கத்தைப்போல் தனிக்காட்டு ராஜவாக நிற்கிறார்.
ரிங்கு சிங் கனவு கண்டது போலவே இன்று கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது உதடுகளும் அவரது பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. பிரமாண்ட சிக்சர்களை விளாசி கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு வெற்றி தேடித் தந்த ரிங்கு சிங்தான் இப்போது இந்தியாவின் ஹாட் டாபிக்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
யு.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை- சிக்கிய திமுக கவுன்சிலர்: ஸ்டாலின் ஆவேசம்!
“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!