சத்தம் கேட்குதா? : ஆஸ்திரேலியாவை மிரட்டும் ஷமி, பும்ரா… அலறவிடும் ரசிகர்கள்!
ICC WorldCup Final : ஆஸ்திரேலிய பந்துவீச்சில் இந்திய அணி ஆல் அவுட் ஆனதால் சைலன்ட் மோடுக்கு சென்ற ரசிகர்கள், இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நரேந்திர மோடி மைதானத்தை அலறவிட்டு வருகின்றனர்.
அகமதாபாத்தில் நடந்து வரும் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், “போட்டியின்போது அகமதாபாத் மைதானம் இந்திய ரசிகர்களால் நிரம்பியிருக்கும். 130,000 நிறைந்திருக்கும் ரசிகர்கள் கூட்டம் இந்திய அணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக கோஷமிடுவார்கள். ஆனால் விளையாட்டில், ஒரு பெரிய கூட்டம் அமைதியாக இருப்பதைக் கேட்பதை விட திருப்திகரமாக எதுவும் இல்லை. அதுவே எங்கள் நோக்கம்” என்று கூறியிருந்தார்.
அதன்படியே 5வது ஓவரில் கில்லை அவுட் ஆக்கியது முதல் 50வது ஓவரின் கடைசி பந்தில் குல்தீப் யாதவை ரன் அவுட் செய்தது முதல் மைதானத்தில் இருந்த ’அமைதியோ அமைதி’ என்ற மோடே நிலவியது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் சொல்லியபடியே இந்திய ரசிகர்களின் சப்தத்தை கம்மி செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பேட்டிங்கை 7 பவுலர்களை வைத்து சிதைத்த ஆஸ்திரேலியா, தற்போது 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை செய்து வருகிறது.
இதற்கிடையே பும்ரா வீசிய முதல் பந்திலேயே வார்னர் கொடுத்த எளிதான கேட்சை மிஸ் செய்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் கோலி.
அதை பயன்படுத்தி கொண்ட தொடக்க வீரர்களான வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் 3 பவுண்டரிகளை விரட்டி தங்களது பங்கிற்கு ரசிகர்களை வேதனைப்படுத்தினர்.
https://twitter.com/kanishak_jha/status/1726234491801448593
எனினும் 2வது ஓவரின் முதல் பந்திலேயே ஷமி பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வார்னர். அப்போது மைதானத்தில் எழுந்த ரசிகர்கள் கூச்சல் அபாய அளவான 127 டெசிபலை எட்டி அலறவிட்டனர்.
தொடர்ந்து 5வது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அதிரடி ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ். அப்போதும் 126 டெசிபலில் மைதானத்தை அலறவிட்டனர் ரசிகர்கள்.
மேலும் 7வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேற அப்போதும் 126 டெசிபலில் அதிர்ந்தது மைதானம்
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி 10 ஓவருக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்துள்ளது. இந்திய பவுலர்களின் ஆதிக்கம் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. இதனையடுத்து மைதானத்தில் இந்திய ரசிகர்களின் சத்தம் எகிறி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ICC WorldCup Final: மோடி மைதானத்தில் கெத்து காட்டிய ராகுல் அவுட்… சைலன்ட் மோடில் ரசிகர்கள்!
WorldCupFinal2023: ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 241