INDvsENG 5th Test : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியில் இன்று(மார்ச் 8) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், தனது 100வது டெஸ்டில் விளையாடி வரும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பறினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் கேப்டன் ரோகித் 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாளில் நடந்தது என்ன?
ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்து 83 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை ரோகித்தும், கில்லும் தொடங்கினர்.
இருவரும் சதத்தை பதிவு செய்த நிலையில் ரோகித் (103 ரன்கள்) பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சிலும், கில் (110 ரன்கள்) ஆண்டர்சன் பந்துவீச்சிலும் கிளீன் போல்டாகி வெளியேறினர்.
தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய படிக்கலும் (65) சர்ஃப்ராஸ் கானும்(56) அரைசதம் அடித்து வெளியேறினர்.
அதனைதொடர்ந்து வந்த வீரர்கள் ஜடேஜா மற்றும் துருவ் ஜூரல் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனது 100 போட்டியில் பெரிய ஸ்கோர் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் டக் அவுட் ஆனார்.
எனினும் தொடர்ந்து களத்தில் குல்தீப் யாதவ் (27*) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா(19) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 473 ரன்கள் குவித்துள்ளதுடன் இங்கிலாந்து அணியை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியின் சாதனை பட்டியல் இதோ!
இன்று முழுவதும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
டிராவிட் சாதனை முறியடித்த ரோகித்!
🛑டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று தனது 12வது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது 48வது சதம் இதுவாகும்.
🛑இதன் மூலம் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் சாதனையை(48 சதங்கள்) ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 100 சதங்களுடன் சச்சினும், 80 சதங்களுடன் விராட் கோலி 2வது இடத்திலும் உள்ளனர்.
🛑டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதங்களும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களும், ரோகித் சர்மா விளாசி உள்ளார்.
🛑அதேபோல் தொடக்க வீரராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (42) சாதனையை முறியடித்து 43 சதங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 49 சதங்களுடன் வார்னரும், 45 சதங்களுடன் சச்சின் 2வது இடத்திலும் உள்ளனர்.
🛑டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை ரோகித் சர்மா கடந்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக 1000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார். மேலும், 1000 ரன்களை கடந்த இந்திய டெஸ்ட் கேப்டன்கள் வரிசையில் 10வது இடத்தையும் பிடித்தார்.
🛑இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடக்க வீரராக அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 4 சதங்களுடன் சுனில் கவாஸ்கர் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.
🛑2021ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் 6 சதங்களுடன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
ஜெய்ஸ்வால், ரோகித், கில் கூட்டணி – வரலாற்று சாதனை!
✅ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தலா 3 சிக்ஸ் அல்லது அதற்கும் மேல் அடிப்பது இதுவே முதல் முறை.
✅டெஸ்ட் போட்டி தொடங்கிய 1877ஆம் ஆண்டு முதல் நடைபெறாத இந்த புதிய சாதனையை 147 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஜெய்ஸ்வால் (3 சிக்ஸ்) ரோகித் (3), சுப்மன் கில் (5) மூவரும் படைத்துள்ளனர். இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் எனப்படும் பேஸ்பால் உத்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் இந்த சாதனை அமைந்துள்ளது.
✅இந்திய டாப் ஆர்டர் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இந்தத் தொடரில் குறைந்தபட்சம் இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு கம்பீர், சேவாக் மற்றும் டிராவிட் ஆகியோர் ஒரு தொடரில் மூவரும் இரண்டு சதங்கள் அடித்து இருந்தார்கள். அவர்களின் சாதனையை 15 வருடம் கழித்து தற்போது ஜெய்ஸ்வால்-ரோகித்-கில் ஜோடி முறியடித்துள்ளது.
✅அதே போல் டாப் ஆர்டர்கள் மூவரும் ஒரே தொடரில் நானூறு ரன்களுக்கு மேல் குவித்தது இந்திய கிரிக்கெட்டில் 6வது முறையாக இந்த தொடரில் நடைபெற்றிருக்கிறது. கடைசியாக 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிட், சேவாக் மற்றும் லட்சுமணன் 400 ரன்கள் கடந்து எடுத்திருந்தார்கள். 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையும் தற்போது படைக்கப்பட்டுள்ளது.
✅இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெங்களூரு குடிநீர் தட்டுப்பாடு : கார் கழுவ தடை… மீறினால் அபராதம்!
புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: 500 பேர் கைது!