2011ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்று 12 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள இந்த நாளில், கோப்பையை வெல்வதற்கான விறுவிறுப்பான கடைசி கட்ட நேரத்தில் ரசிகர்களின் செயலால் நெகிழ்ந்த தருணம் பற்றி பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி.
இந்தியா ஐசிசி கோப்பைகளை பலமுறை வென்றுள்ளது. ஆனால் 2011ஆம் ஆண்டு பெற்ற ஒருநாள் உலகக்கோப்பையானது அனைத்து இந்திய ரசிகர்களாலும் இன்று மட்டுமல்ல, எப்போதும் கொண்டாடக்கூடிய ஒரு உலகக்கோப்பையாகத்தான் இருக்கும்.
ஏனென்றால் கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக வழங்கிய பங்களிப்பிற்காக அவருக்காக இந்த கோப்பையை கைப்பற்றியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய இந்திய அணியானது அந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதியில் கோப்பையை வென்று அவருக்கு பரிசளித்தது.

இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் இந்திய அணி 275 ரன்களை சேசிங் செய்யும்போது தோனி களம் இறங்கி தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்திய அணி வெற்றி இலக்கின் அருகில் வந்தது. கடைசி 2 ஓவர்களில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், யுவராஜ் சிங் ஒரு ரன் எடுத்தார். பின்னர் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை எனும் போது தோனி “லாங் ஆன்” திசையில் அடித்த வரலாற்று சிக்ஸரில் இந்தியா 28 வருடங்கள் கழித்து வெற்றிப் பெற்று கோப்பையை கையில் ஏந்தியது.
“சச்சினுக்காக இந்த உலகக் கோப்பையை நிச்சயம் வெல்வோம் என சூளுரைத்த இந்திய வீரர்கள், கோப்பையை வென்றப் பின் சச்சினை தங்களது தோல் மீது சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். இப்போதும் இந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களின் கண்முன்னே வந்து போகும்.

இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற தருணம் குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் தோனி, “உலக கோப்பையை வென்ற அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது . அந்த தருணம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.
இலக்கு இன்னும் சிறிது தூரத்தில் தான் இருக்கிறது போட்டியை நாம் வெற்றிகரமாக முடிக்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டே விளையாடினேன். கடைசி 20 நிமிடங்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் தேசிய கீதத்தை பாட ஆரம்பித்து விட்டனர்.
20 நிமிடங்கள் ரசிகர்கள் தேசிய கீதத்தை பாடிக்கொண்டே இருந்தனர். அந்த 20 நிமிடங்கள் தான் என்னுள் இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது. இன்றளவும் அந்த 20 நிமிடங்கள் என் நினைவில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்