எத்தனையோ விமர்சனங்கள் மாறுபட்ட கருத்துக்களை தாண்டி இலங்கைக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
மூன்று டி 20 மற்றும் மூன்று ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் போராடிதோல்வி கண்டது.
இந்நிலையில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டத்தில் மூன்றாவது டி20 போட்டியானது மும்பை ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்ட்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (ஜனவரி 7) இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 1 ரன்னோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தார். எனினும் அடுத்து களமிறங்கிய திரிபாதி மற்றும் சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர்.
அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்த நிலையில் அதிரடியாக ஆடிவந்த திரிபாதி 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம்
இதன்பிறகு தான் மிஸ்டர் 360 டிகிரி என செல்லமாக அழைக்கப்படும் சூர்யகுமார் களமிறங்கினார். ஆரம்பத்தில் இருந்தே தனது அதிரடியால் மைதானத்தின் நாலாப்புறமும் பந்துகளை சுழன்றடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
26 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்கை, அதன்பின்னரும் தனது மட்டையின் வேகத்தை குறைக்கவில்லை.
இதற்கிடையே சுப்மன் கில் 46 ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து கேப்டன் ஹர்திக் (4), தீபக் ஹூடா (4) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
எனினும் மறுபக்கத்தில் தனது அதிவேகத்தை சற்றும் குறைக்காத சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் தனது 3வது சதத்தை அடித்து அசத்தினார். இதனால் இந்த ஆண்டின் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் தொடக்கவீரராக இன்றி குறுகிய இன்னிங்சில் (45) அதிவேகமாக 3 சதங்களை அடித்த முதல் வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 110 ரன்களை தாண்டிய வீரர் மற்றும் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த 2வது இந்திய வீரர் போன்ற பல சாதனைகளையும் படைத்தார் சூர்யகுமார் யாதவ்.
அவருடன் கடைசி கட்டத்தில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
சூர்யகுமார் 112 ரன்களும், அக்சர் 21 ரன்களும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில் மதுஷன்கா 2 விக்கெட்டுகளும், ரஜிதா, குணரத்னே, ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
பணிந்தது இலங்கை
ஆரம்பத்தில் தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை (44 ரன்கள்) அளித்தனர். எனினும் குஷால் மெண்டிஸை 5வது ஓவரில் அக்ஸர் படேல் தனது சுழலில் வெளியேற்றினார்.
அவரை தொடர்ந்து இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சின் முன்னால் இலங்கை அணி வீரர்கள் தடுமாறியதுடன், அடுத்தடுத்து விக்கெட்டையும் பறிகொடுத்தனர்.
17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தொடரும் இந்தியாவின் வரலாற்று வெற்றி
இந்திய அணி தரப்பில், கடந்த ஆட்டத்தில் அதிக நோ பால்களை வீசி விமர்சனத்திற்கு உள்ளான அர்ஷ்தீப் சிங் , இன்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக 3 விக்கெட்களை சாய்த்து பதிலடி கொடுத்தார். ஹர்திக், உம்ரன் மாலிக், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், சொந்த மண்ணில் இதுவரை இலங்கையுடன் நடந்த அனைத்து வடிவ போட்டிகளிலும் தொடரை வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி தக்க வைத்துள்ளது.
முடிவில் ஆட்டநாயகனாக அதிரடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவும், தொடர் நாயகனாக அக்சர் பட்டேலும் தேர்வு செய்யப்பட்டனர்.
கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி20 தொடரை வென்று தனது தலைமையை நிரூபித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
இதனையடுத்து வரும் ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியை சந்திக்கிறது ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி. ஆட்டத்தில் அனல் பறக்குமா? தொடரைக் கைப்பற்றி வரலாறை தக்கவைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பவித்ரா பாலசுப்ரமணியன், கிறிஸ்டோபர் ஜெமா
எனக்கு ராஜாவா நா வாழுறேன்! : ரொனால்டோ லேட்டஸ்ட் வீடியோ
“நிருபர்கள் அனுசரித்து போகணும்”: அண்ணாமலைக்கு ஆதரவாக பச்சமுத்து