ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
காரணம் இந்த தொடரை வென்றால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற முடியும்.
இந்நிலையில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும் 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதனால் நிச்சயம் கடைசி போட்டியை வென்றாக வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 4வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களை குவித்து 91 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்திய அணியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸிற்கு ஆஸ்திரேலியா களமிறங்கியது.
78.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலியா 175 ரன்கள் எடுத்திருந்தது. இன்று (மார்ச் 13) பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி நாள் ஆட்டம் என்பதால் மேட்ச் டிரா செய்யப்பட்டது.
இதனால் இந்தியா 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிக்கு 2வது அணியாகத் தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றதால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதாக ஐசிசி அறிவித்திருந்தது.
மோனிஷா
அதானி – ராகுல் காந்தி: எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!