இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
மகளிர் ஆசியக் கோப்பை வங்கதேசம் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடிய இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது.
ஆனால் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வந்த இந்திய அணி இன்று (அக்டோபர் 15) இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் மோதியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து அவ்வணியின் தொடக்க வீரர்களாகச் சாமரி அதபத்து மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி ஆகிய இருவரும் களமிறங்கினர்.
இந்தியப் பந்துவீச்சாளர் தீப்தி ஷர்மாவின் அசத்தலான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் ஓவர் இறுதியில் இலங்கை அணி 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இரண்டாவது ஓவரில் பந்துவீசிய ரேனுகா தாக்கூர் இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்துவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 3.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் மட்டும் எடுத்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இனோகா ரன்வீரா அதிகபட்சமாக 18 ரன்களும், ரனசிங்கே 13 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை மட்டுமே எடுத்தது,
இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா சிங் 3 ஓவர்களை வீசி, அதில் ஒரு ஓவரை மெய்டனாக்கி, 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
3வது ஓவரில் ஷபாலி ஆட்டமிழக்க, தொடர்ந்து விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதத்தைக் கடந்து அசத்தினார்.
ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்த ஜெமிமா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் கேப்டன் ஹர்மன்பிரித் களமிறங்கினார். 8.3வது ஓவரில் இந்திய அணி 71 ரன்களை எடுத்து இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 7வது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது.
ஹர்மன்பிரித் 11 ரன்களும் ஸ்மிருதி மந்தனா 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில், கடந்த 1 மாதத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
பச்சை மையால் பஞ்சாயத்துத் தலைவர்கள் கையெழுத்திடலாமா?: ஆர்டிஐ தகவல்!