டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. India won t20 world cup
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள கென்சிங்டன் ஓவல் பார்படாஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 29) இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் கேஷவ் மகாராஜ் வீசிய பந்தில் ரோஹித் சர்மா கேட்ச் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதே ஓவரில் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி நடையை கட்டினார். ஒரே ஓவரில் இரண்டு முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி ரசிகர்கள் அப்செட்டாகினர்.
அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 5-வது ஓவரின் போது மூன்று ரன்களுடன் வெளியேறினார். அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால், இந்திய அணி தடுமாறியது.
இதனை தொடர்ந்து நிதானமாக ஆடிய விராட் கோலி – அக்சர் பட்டேல் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீட்டனர். 14-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தபோது அக்சர் பட்டேல் 47 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை மேற்கொண்ட விராட் கோலி, அணிக்கு பக்கபலமாக இருந்தார். 19-வது ஓவரில் மார்கோ ஜேன்சென் வீசிய பந்தில் விராட் கோலி கேட்ச் அவுட்டானார். 59 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 76 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் ரீசா ஹெண்டிரிக்ஸ் – டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் ரீசா ஹெண்டிரிக்ஸ் போல்ட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய மார்க்ரம், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் மூன்றாவது ஓவரில் கேட்ச் அவுட்டாகி நடையை கட்டினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்த தென் ஆப்பிரிக்கா அணியை டி காக் – ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி கைகொடுத்து தூக்கினர். இருப்பினும் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. 9-வது ஓவரில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் போல்ட் ஆனார். அதிரடியாக ஆடிய டி காக் 39 ரன்களுடனும் கிளாசன் 52 ரன்களுடனும் வெளியேறினர்.
இறுதியாக ஒரு ஓவருக்கு 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இறுதி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் முதல் பந்தை எதிர்கொண்ட மில்லர், தூக்கி அடித்தார். சிக்சர் என்று நினைத்த பந்தை எல்லைக்கோட்டில் வைத்து சூர்யகுமார் பிடித்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தது. இந்த கேட்ச் தான் மேட்ச்சின் டேர்னிங் பாயிண்ட்டாகவே அமைந்தது.
தொடர்து 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. India won t20 world cup
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா பயனற்றது” – காரணம் சொல்லும் சசிகலா