இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் சிறப்பாக முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர்.
சுப்மன் கில் 70 ரன்களில் ஆட்டமிக்க, அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் 83 ரன்களில் அவுட் ஆனார்.
அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி சர்வதேச போட்டிகளில் தனது 73வது சதம் அடித்து அசத்தினார். மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த 45-வது சதம் இதுவாகும்.
இதன்மூலம் இலங்கைக்கு எதிராக இந்திய மண்ணில் 9 சதங்கள் அடித்து சச்சின்(8) சாதனையை முறியடித்துள்ளார். மேலும் இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்த சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது.
இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட் கைப்பற்றினார். தில்சன் மதுசங்கா, கருணாரத்னே, தசுன் சனகா, தனஞ்செய டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் நிஷாங்க பொறுமையுடன் விளையாட, தடுமாறிய அவிஷ்கா பெர்னாண்டோ 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து குஷால் மெண்டிஸ்(0), சரித் அஷலங்கா(23), தனஞ்செய டி சில்வா(47) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இதற்கிடையே தொடக்க வீரர் நிஷாங்காவும் அரைசதம் கடந்த நிலையில் 72 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் இலங்கை அணி கேப்டன் தஷூன் சனகா மட்டுமே இலக்கை நோக்கி இலங்கையை கொண்டு செல்ல போராடினார். ஆனால் அவருக்கு உறுதுணையாக எந்த வீரரும் களத்தில் நிற்கவில்லை.
கடைசி ஓவர் வரை போராடிய சனகா ஒருநாள் போட்டியில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். எனினும் அவரது போராட்டம் இலங்கை அணி கெளரவமான ஸ்கோரை எட்ட மட்டுமே உதவியது.
50ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 306ரன்கள் எடுத்தது. இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி அச்சுறுத்திய உம்ரான் மாலிக் 3விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ் 2விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அபாரமான சதத்துடன் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய விராட்கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி