Asian Games: 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!

Published On:

| By christopher

india won gold medal in equestrian

ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் இந்தியா முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தாண்டு ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. தொடக்க நாள் முதலே சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா, இந்த முறை இதுவரை கால் பதிக்காத பல விளையாட்டுகளிலும் பதக்கம் வென்று அசத்தி வருகிறது.

இன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் டிரெஸ்ஸேஜ் பிரிவில் இந்திய அணி சார்பில் சுதிப்தி ஹஜேலா (சின்ஸ்கி – குதிரை பெயர்), ஹிருதய் விபுல் சேடா (கெம்க்ஸ்ப்ரோ எமரால்டு), அனுஷ் அகர்வாலா (எட்ரோ), மற்றும் திவ்யகிருதி சிங் (அட்ரினலின் ஃபிர்ஃபோட்) ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டியின் முடிவில் இந்திய அணி 209.205 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தையும், சீனா 204.882 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஹாங்காங் சீனா 204.852 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றின.

இதன்மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

முன்னதாக 1982 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் முறையாக குதிரையேற்றத்தில் தங்கப் பதக்கம் வென்றது.

அப்போது ரகுபீர் சிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். அத்துடன் மேலும் 2 பிரிவுகளிலும் வென்று இந்தியாவுக்கு மொத்தம் 3 தங்கப்பதக்கம் கிடைத்தது.

இந்த நிலையில் இன்று குதிரையேற்ற போட்டியில் இந்தியா 4வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

எனினும் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் நடந்த போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கத்துடன் 14 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 6 ஆவது இடத்தில் நீடிக்கிறது.

முன்னதாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும், மகளிர் கிரிக்கெட் போட்டியிலும் முதன்முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

50 சதவீத தள்ளுபடி விலையில் தமிழ் நூல்கள்!

கொடநாடு விவகாரம் – எடப்பாடி வழக்கு : தனபாலுக்கு தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share