இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா… சாதனை படைத்த இளம் வீரர்கள்!

Published On:

| By christopher

INDvsENG 1st T20: இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளது.

அதன்படி இரு அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஜனவரி 22) நடைபெற்றது.

அதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

இங்கிலாந்து அணி தரப்பில் சால்ட் மற்றும் டக்கெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் முதல் ஓவரிலேயே சால்ட்டை டக் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தார் அர்ஸ்தீப் சீங். தனது அடுத்த ஓவரிலேயே டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அர்ஷ்தீப் சிங்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஜோஸ் பட்லர்(68) மட்டுமே உறுதியுடன் விளையாட, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், அர்ஸ்தீப், ஹர்திக் மற்றும் அக்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.

5 ஓவர்களில் இந்த ஜோடி 40 ரன்கள் குவித்த நிலையில் புல்ஷாட் அடிக்க முயன்ற சஞ்சு சாம்சன், அட்கின்சனிடம் கேட்ச் கொடுத்து 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அதே ஓவரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

எனினும் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா வெறும் 20 பந்தில் அரைசதம் அடித்து அசரடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் விளாசியை இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சிறப்பாக விளையாடி அவர் 79 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய திலக் வர்மா(19) மற்றும் ஹர்திக் பாண்டியா(3) இருவரும் 12.5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel