தோல்வியே காணாத அணி : சாம்பியன்களின் ‘சாம்பியன்’ இந்தியா

Published On:

| By Kumaresan M

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று (மார்ச் 9) மதியம் துபாயில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ரோகித்துடன் இணைந்து சுப்மன் கில் களம் இறங்கினார். ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோகித் சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாட சுப்மன் கில் நிதானத்தை கடைபிடித்தார்.rohit century against newzealand

இதனால், இந்திய அணி 7 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. 10 ஓவர்களில் இந்திய அணி 64 ரன்களை எடுத்திருந்தது. ரோகித் சர்மா 41 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில், 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

இந்திய அணி 105 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில் 31 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய கோலி ஒரு ரன்னில் எல்.பி.டபிள்யூ முறையில் பிரஸ்வெல் பந்தில் அவுட் ஆக, ஆட்டத்தில் சற்று பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தொடர்ந்து, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா திடீரென்று அவுட் ஆகி அதிர்ச்சி ஏற்படுத்தினார். ரச்சின் ரவீந்தரா பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று அவர் ஸ்டம்பிங் ஆனார். ரோதித் 76 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐய்யரும் அக்ஷார் பட்டேலும் இந்திய இன்னிங்ஸை கட்டமைக்க தொடங்கினர்.

ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்திருந்த போது, கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது, இந்திய அணி 183 ரன்களை எடுத்திருந்தது. அக்ஷார் பட்டேல் 29 ரன்களில் அவுட் ஆகி விட கே.எல். ராகுலும், பாண்ட்யாவும் சேர்ந்து ஆடினர். பாண்ட்யா 18 பந்துகளில் 18 ரன்களில் அவுட் ஆனார். அப்போது, இந்திய வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்து, ரவீந்தர ஜடேஜா, ராகுலுடன் சேர்ந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 49வது ஓவரில் இந்திய அணி 254 ரன்கள் அடித்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் கே.எல்.ராகுல் 34 ரன்களும் ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தொடரில் தோல்வியே காணாமல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கடந்த 2002, 2013 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றியிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share