இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தென்னாப்பிரிக்கா அணி டி காக் 5 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் மார்க்ரம் 79 ரன்களும், ஹென்ரிக்ஸ் 74 ரன்களும் எடுத்து அசத்தினர். 50 ஓவர் இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது.

இதனால் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகார் தவான் 13 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து களத்தில் இணைந்த இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவருமே தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துக்களை பறக்க விட்டு அரைசதத்தைக் கடந்து அசத்தினர்.
இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 161 ரன்களை குவித்தனர். இஷான் கிஷான் 93 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோர்ன் ஃபார்டுயின் பந்துவீச்சில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
கிஷான் ஆட்டமிழந்தாலும் ஸ்ரேயஸ் தொடர்ச்சியாக ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தார். இவருடன் சஞ்சு சாம்சன் களத்தில் இணைந்தார்.
42 ஆவது ஓவரில் இந்திய அணி 253 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயஸ் சதம் அடித்து, ஒரு நாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். 45 ஆவது ஓவரில் 273 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு அடுத்த ஐந்து ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் எளிமையான டார்கெட்டுடன் விளையாடியது.
தொடர்ந்து விளையாடிய சாம்சன் மற்றும் ஸ்ரேயஸ் 45.5 ஓவரில் 282 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதனால் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மோனிஷா