டி20 உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அங்கு, இந்திய அணி 4 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
கடந்த அக்டோபர் 10 ஆம் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றிருந்தன. இவ்விரு ஆட்டங்களும் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 17) மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் பலமிக்க ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ரன்களில் வெளியேற, விராட் கோலி ராகுலுடன் இணைந்தார். தொடர்ந்து விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதத்தைக் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடக்க வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி உற்சாகத்துடன் பந்துவீச்சைத் தொடர்ந்தது.
தொடர்ந்து கோலியும் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார்.
20 ஓவர் இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்தனர் ஆஸ்திரேலியா பேட்டர்கள். இதனால் 4.4 ஓவர்களிலேயே 50 ரன்களைத் தொட்டது ஆஸ்திரேலியா அணி.
அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ், 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஸ்மித் 11 ரன்கள், மேக்ஸ்வெல் 23 ரன்கள், ஸ்டாய்ன்ஸ் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் ஃபிஞ்ச் இன்று அபாரமாக விளையாடி ரன்ரேட் குறையாமல் 40 பந்துகளில் அரை சதம் எட்டினார். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடர்ந்து ஃபிஞ்சே பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வந்தார். கடைசிக்கட்டத்தில் ஃபிஞ்ச் 79 ரன்களில் ஹர்திக் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து, 19வது ஓவரில் டிம் டேவிட்டை 5 ரன்களில் ரன் அவுட் செய்தார் விராட் கோலி. 19வது ஓவர் இறுதியில் 5 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் உயராமல் பார்த்துக் கொண்டார் ஹர்ஷல் படேல்.
இதையடுத்து, கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. 6 பந்துகளில் 11 ரன்கள் என்பது சுலபமான இலக்காக இருந்ததால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கவனமுடன் விளையாட வேண்டிய தருணமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முகமது ஷமி க்கு கடைசி ஓவரை வழங்கினார், ரோகித். இந்த ஓவரில் கம்மின்ஸ் ஒரு பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்றபோது அதை கோலி எல்லைக்கோட்டுக்கு அருகே அற்புதமாக கேட்ச் பிடித்து 7 ரன்களில் அவரை வெளியேற்றினார்.
அடுத்த பந்தில் அஷ்டன் அகர் ரன் அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்தில் இங்லீஸ் 1 ரன்னில் போல்ட் ஆனார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்கிற நிலையில் கேன் ரிச்சர்ட்சனை போல்ட் செய்தார் ஷமி.
கடைசி 4 பந்துகளில் தொடர்ந்து விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கடைசி ஓவரை அட்டகாசமாக வீசிய ஷமி, இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.
மோனிஷா
டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா!
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் : 17 படங்கள், 2000 கோடி!