விளாசிய ரோகித்… பதிலடி கொடுத்த கார்த்திக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

விளையாட்டு

நாக்பூரில் நேற்றிரவு (செப்டம்பர் 23) நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனால் இரண்டாவது ஆட்டத்தில் வாழ்வா சாவா போராட்டத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.

8 ஓவர் மேட்ச்!

நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடியது மழைதான். இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஆட்டம் 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதிரடி காட்டிய பிஞ்ச், வேட்!

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் அதிரடி காட்டியது. இதனால் ரன்வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு பக்கம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 31(15) மற்றும் மேத்யூ வேட் 43(20) ஆகியோர் சிக்ஸ்ர் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இதனால் 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி 90 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மீண்டும் காயத்திற்கு பிறகு திரும்பிய வேகபந்து வீச்சாளர் பும்ரா 1 விக்கெட் எடுத்தார்.

ரோகித் காட்டிய வாணவேடிக்கை!

91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் தடுமாறிய நிலையில் முதல் ஓவரில் இருந்து அதிரடி காட்டிய ரோகித் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மாறி பவுண்டரி, சிக்ஸர்களாக ஆஸ்திரேலியா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

ரோகித் ஒருபக்கம் அதிரடி ஆட்டம் காட்டினாலும், மறுப்பக்கம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (10), கோலி (11), சூர்யகுமார் யாதவ் (0), ஹர்திக் பாண்டியா (9) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

2 பந்து.. ஆட்டம் முடிந்தது!

இதனால் இந்திய அணி வெற்றிபெறுமா என்ற நிலை ஏற்பட்டது. கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் விக்கெட் கீப்பரும் அனுபவ வீரருமான தினேஷ் கார்த்திக் களம் புகுந்தார்.

ஆனால் எந்தவித பதட்டமும் இன்றி கடைசி ஓவரை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனால் 7.2 ஓவர்களில் 92 ரன்கள் குவித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

தொடக்கம் முதல் இறுதிவரை களத்தில் நின்று 20 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் பறக்கவிட்டு 40 ரன்கள் குவித்த கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தினேஷ் கார்த்திக்கின் பதிலடி!

டி20 உலககோப்பையில் அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேவேளையில் நெருக்கடியான சூழ்நிலையில் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், இந்த ஆட்டத்திலும் அதனை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்துள்ளார்.

இதனைதொடர்ந்து கடைசி மற்றும் 3வது டி20 போட்டி வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
1
+1
2
+1
0
+1
8
+1
0
+1
2
+1
2

Leave a Reply

Your email address will not be published.