தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று இரவு (செப்டம்பர் 28) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.
அதன்படி இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.
சஹார் – அர்ஸ்தீப் மிரட்டல் வேகம்!
தென்னாப்பிரிக்கா அணியின் குயிண்டன் டிகாக் மற்றும் கேப்டன் பவுமா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால் முதல் மூன்று ஓவர்களில் தீபக் சஹார் – அர்ஸ்தீப் சிங் ஆகியோரின் மிரட்டலான வேக கூட்டணி, தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை அடியோடு சாய்த்தது.
இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் பவுமா (0), டிகாக் (1), ரோசோ (0), மில்லர் (0) மற்றும் ஸ்ட்ப்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர்.
இதனால் முதல் 3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா 14 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் தவித்தது.
எனினும் தொடர்ந்து ஆட வந்த மார்க்ராம் (25) பார்னெல் (24) மற்றும் கேசவ் மகராஜ் (41) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு106 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
ராகுல் – சூர்யகுமார் அபார ஆட்டம்!
இதனை தொடர்ந்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் கேப்டன் ரோகித்(0), அவரை தொடர்ந்து கோலி (3) ஆகியோர் பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் கே.எல். ராகுல் (51) மற்றும் சூர்யகுமார் யாதவ் (50) இருவரும் தங்களது அரைசதத்துடன் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
இதனை தொடர்ந்து முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்டநாயகன் விருது!
ஆட்டத்தின் தொடக்கத்திலே தனது சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை பறித்த அர்ஸ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அர்ஷ்தீப் சிங்கின் அசத்தல்: 106 ரன்னில் சுருண்ட தெ.ஆப்பிரிக்கா!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!