இங்கிலாந்து மகளிர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணியினர் கைப்பற்றினர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடியது.
இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அதனைதொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இதில் முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இங்கிலாந்தின் பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர்.
பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தனர்.
இதனால் 100 ரன்களை கடக்குமா என்ற நிலையில் மந்தனா மற்றும் தீப்தி சர்மாவின் பொறுப்பான அரை சதத்தால் இந்திய அணி 169 ரன்கள் குவித்தது.

நம்பிக்கை பொய்த்தது!
50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டியில் 170 ரன்கள் எளிதான இலக்கு என்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து அணியினர் ஆட்டத்தை துவங்கினர்.
ஆனால் யாரும் நிலைத்து நின்று ஆடாத நிலையில், 43.3 ஓவர்களில் 153 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.
இதில் வெற்றி பெறும் நிலையில் இருந்த இங்கிலாந்து அணி தீப்தி சர்மா எடுத்த மன்கட் விக்கெட்டால் ஆட்டத்தை பறிகொடுத்தது.
இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மகளிர் அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணியினர் கைப்பற்றினர்.

ஒரு சதம் உட்பட 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர் வீராங்கனை விருதுபெற்றார்.
அதேபோல் கடைசி ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ரேணுகா சிங் ஆட்டவீராங்கனை விருது பெற்றார்.
கடைசி போட்டியில் முத்திரை பதித்த கோஸ்வாமி
இந்த போட்டியுடன் ஓய்வு பெறும் இந்திய மகளிர் அணியின் மூத்த வேகப்பந்து வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமிக்கு (39) சிறந்த வெற்றியை பரிசாக அளித்து அவரை வழியனுப்பினர்.

கடந்த 2002 முதல் 20 ஆண்டுகளாக இந்தியா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜூலன் கோஸ்வாமி தனது கடைசி போட்டியிலும் முத்திரை பதித்ததார்.
10 ஓவர்கள் வீசிய அவர் 3 மெய்டன்களுடன் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சரவெடி சதம் அடித்த கவுர்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி!