இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றி உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 21) இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது.
அதிரடி.. சரவெடி.. சதம் கண்ட கேப்டன்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் தொடக்கம் முதல் சரவெடியாக வெடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 18 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.
100 பந்துகளில் சதமடித்த அவர் கடைசி 11 பந்துகளில் முறையே (6,4,4,6,1,6,4,4,4,0) என 43 ரன்கள் விளாசினார். மொத்தமாக கடைசி 3 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் அடிக்கப்பட்டது.
அவருக்கு பக்கபலமாக ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.
தடுமாறிய இங்கிலாந்து அணி!
இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
அதன்பின்னர் நிதானமாக முயற்சித்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 44.2 ஓவரில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக ஆட்டத்தை வென்றது.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள், ஹேமலதா 2, ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் விருது!
இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்துடன் (143*) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5வது சதத்தை பதிவு செய்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கிறிஸ்டோபர் ஜெமா
இதனால்தான் தோற்றோம்: ரோகித் சர்மா
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல் : திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!