19வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் உள்ள ஹங்சோ நகரில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான துவக்க விழா கடந்த செப்டம்பர் 23 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்திய அணிக்காக, ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோய்ன், ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர்.
இந்நிலையில், பதக்கப்போட்டிகளுக்கான ஆட்டங்கள் நேற்று (செப்டம்பர் 24) முதல் துவங்கியது. இதில், முதல் நாளிலேயே 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைஃபிள் குழு பிரிவில், ஆஷி சவுக்சி, மேகுளி கோஷ் மற்றும் ரமிடா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்று, 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணிக்கான முதல் பதக்கத்தை பதிவு செய்தனர். பின்பு நடந்த மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் (தனி) பிரிவில், ரமிடா வெண்கலம் வென்று இந்திய அணிக்கான 2வது பதக்கத்தை உறுதி செய்தார்.
துப்பாக்கி சுடுதல் மட்டுமின்றி, ரோவிங்கிலும் இந்திய அணி பதக்கங்களை குவித்துள்ளது. ஆடவர் லைட்-வெயிட் டபிள் ஸ்கல்ஸ் பிரிவிலும், ஆடவர் 8 பேர் கொண்ட குழு பிரிவிலும், இந்திய அணி வெள்ளி பத்தக்கத்தை வென்றுள்ளது. அதேபோல, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
இதன்மூலம், இந்திய அணி முதல் நாளில் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை குவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. கால்பந்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுனில் சேத்ரி தலைமையிலான ஆடவர் அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 25) துவங்கிய 2ம் நாள் போட்டிகளில், ரோவிங்கில் மேலும் ஒரு பதக்கத்தை குவித்து இந்திய அணி அபாரம் காட்டியுள்ளது.
ஆடவர் காக்ஸ்லஸ் 4 பிரிவில், ஆஷிஷ், பீம் சிங், ஜஸ்விந்தர் சிங் மற்றும் புனித் குமார் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து ஆடவர் துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைஃபிள் (குழு) பிரிவில், ருத்ரன்காஷ் பட்டேல், திவ்யான்ஷ் சிங் மற்றும் ஐஸ்வர்ய பிரதாப் தோமர் ஆகியோர் முதலிடத்தை பிடித்து, இந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணிக்கான முதல் தங்கத்தை கைப்பற்றி, சாதனை படைத்துள்ளனர்.
இதன்மூலம், 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களுடன், இந்தியா பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 23 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என 38 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 16 பதக்கங்களுடன் ரிபப்ளிக் ஆப் கொரியா 2வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், நீச்சல் போட்டிகளில் ஆடவர் 50 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்தியாவின் ஶ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். எனவே, இன்றைய நாளில் இந்திய அணி மேலும் சில பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.
முரளி
சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!
எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!
புரட்டாசி விரதம்: காசிமேடு மீனவர்கள் தவிப்பு!