டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் நடக்கும் கடைசி ஆட்டம் என்றாலும் இந்தியா – ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சூர்யாகுமார் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோரின் அபார திறமையால் அனல் பறந்தது.
மெல்போர்னில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங்!
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல் ராகுல் மற்றும், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். கோலி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி 5 ஓவர்களில் சூர்ய குமார் – ஹர்திக் ஜோடி வெளிபடுத்திய சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 186 ரன்கள் குவித்தது.

முதல் பந்தில் டக் அவுட்!
கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும், அதில் 18 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதனை தொடர்ந்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே.
எதிர்பார்த்தது போலவே புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார் ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர் மெதவேர்(0).
அவரை தொடந்து விக்கெட் கீப்பர் சக்காப்வா(0) வந்த வேகத்திலேயே அர்ஸ்தீப் சிங்கின் வேகத்தில் கிளீன் போல்டாகி ஆகி வெளியேறினார்.
இதனால் முதல் 3 ஓவர்களில் 7 ரன்களில் ஜிம்பாப்வேயை ஸ்தம்பிக்க வைத்த இந்தியா வெற்றி முகத்துடன் பயணிக்க தொடங்கியது.
பின்னர் ஓரளவுக்கு போராட முயற்சித்த வில்லியம்ஸ்(11) மற்றும் கேப்டன் எர்வின்(13) ஆகியோரும் பவர்பிளேவிற்கு அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
ஒத்த ரோசாவாக ஆடிய ராஸா
அவர்களை தொடந்து அணியை காப்பாற்றும் முயற்சியில் ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சிக்கந்தர் ராசா மற்றும் ரியான் ஆகியோர் பொறுப்புடன் ஆடினர்.

இருவரும் சேர்ந்து 60 ரன்களை சேர்த்து கூட்டணி அமைத்த நிலையில் அஸ்வின் சுழலில் ரியான் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அதன் பின் வந்த யாரும் ராஸாவுக்கு துணையாக நிற்காமல், இந்திய அணியின் பந்துவீச்சில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். கடைசி வரை போராடிய ராஸாவும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
18.2 ஓவர்களில் 115 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணியிடம் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஜிம்பாப்வே அணி சோகத்துடன் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.
இந்திய அணி பந்துவீச்சில், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஹர்திக், ஷமி ஆகியோர் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர், அர்ஸ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதலிடத்தில் இந்தியா
சூப்பர் 12 சுற்றில் குரூப் 2ல் இடம்பெற்ற இந்திய அணி 4 போட்டிகள் வெற்றியுடன் 8 புள்ளிகளுடன், பாகிஸ்தானை பின் தள்ளி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இதனைதொடந்து அரையிறுதி போட்டிகள் வரும் 9,10ம் தேதிகளில் நடைபெறுகிறது.
அரையிறுதியில் யாருடன் போட்டி!
9ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
10ம் தேதி அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் இரு அணிகளும் வரும் 13ம் தேதி மெல்போர்னில் நடக்கும் இறுதிப்போட்டியில் மோதும்.
கிறிஸ்டோபர் ஜெமா