பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது.
இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய மகளிர் அணி இன்று(பிப்ரவரி 20) தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியுடன் விளையாடியது.
இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு க்கெபெர்ஹா ,செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் ஆட்டம் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மந்தனா மற்றும் ஷபாலி அபாரமாக ஆடினர்.
இதில் மந்தனா 87 ரன் குவித்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எமி ஹண்டர் மற்றும் கேபி லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் எமி ஹண்டர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். இதையடுத்து களம் புகுந்த ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ரேனுகா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
இதையடுத்து அயர்லாந்து அணியின் கேப்டன் டெலனி, கேபி லீவிசுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியில் சரிவில் இருந்து மீட்டதோடு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அயர்லாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது
இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து வெற்றி பெற 60 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அயர்லாந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
கலை.ரா
கிரிக்கெட் வீரரை தாக்கிய நடிகைக்கு ஜாமின்!
மீனவர் விவகாரம்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!