நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 9ம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் ஆஸ்திரேலியாவை 177 ரன்களில் சுருட்டியது இந்திய அணியின் ஜடேஜா – அஸ்வின் சுழல் கூட்டணி.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள், ஜடேஜா 70 ரன்கள், அக்சர் பட்டேல் 84 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் அறிமுக வீரர் டோட் முர்பி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனையடுத்து 220 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா அணி. ஆனால் அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் தனது சுழல் தாக்குதலை தொடுத்தார்.
அதனை எதிர்கொள்ள முடியாமல் திணறிய உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் அலெக்ஸ் கேரி உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து அஸ்வின் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் (25*) கடைசி வரை போராடினாலும், அவருக்கு துணையாக ஒரு வீரரும் நிற்கவில்லை.
இதனால் ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதே வேளையில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த அபார வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பொள்ளாச்சி வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?