பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மோதிய டி 20 உலக கோப்பை போட்டியானது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்றது.
அர்ஸ்தீப் சிங் அபாரம்!
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரின் விக்கெட்டுகளையும் இந்தியாவின் இளம் வீரர் அர்ஸ்தீப் அடுத்தடுத்து வீழ்த்தினார். இதனால் முதல் 5 ஒவரில் 24 ரன்களுக்கு முக்கிய 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது.

இப்திகார், மசூத் அரைசதம்!
எனினும் மசூத் மற்றும் இப்திகாரின் பொறுப்பான ஆட்டம் பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 50 ரன்கள் குவித்த நிலையில் அரைசதம் சண்ட இப்திகாரை முகமது ஷமி கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.
பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் உறுதியாக நின்று ஆடிய மசூத் அரைசதம் கடந்தார்.
அவருக்கு துணையாக கடைசி கட்டத்தில் இறங்கிய ஷாகின் அப்ரிடியும் பவுண்டரி சிக்ஸர் விளாச, 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் ஹர்ஸ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் மற்றும் ஷார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆரம்பம்… தடுமாற்றம்!
இந்நிலையில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
அபாரமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்தியா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கண்டிப்பாய் வெற்றி வாகை சூடி விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் வெறும் 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் பாகிஸ்தானைப் போலவே இந்தியாவும் 5 ஓவரில் 22 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதுமட்டுமின்றி அடுத்துவந்த அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் (15) மற்றும் அக்சர் பட்டேல் (2) ஆகியோரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தெறிக்கவிட்ட கோலி – பாண்ட்யா ஜோடி!
பலத்த நெருக்கடிக்கு இடையே அனுபவ வீரர் விராட்கோலியும், ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் நிதானமாக ஆடினர். இதனால் இந்தியாவின் ரன்ரேட் படிபடியாக உயர்ந்தது.

10 ஓவர் முடிவில் இந்திய அணி 45 மட்டுமே ரன்கள் குவித்திருந்த நிலையில், அதன்பின்னர் இருவரும் அதிரடி ஆட்டத்திற்கு மாறினர்.
முகமது நவாஷ் வீசிய 12வது ஓவரில் இருவரின் அதிரடியில் 3 சிக்ஸர் பறக்க அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்தது.
இதனால் ஒரு கட்டத்தில் இந்தியா ஜெயிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் குறிப்பாக கோலியின் அதிரடியான ஆட்டம் பாகிஸ்தானை கதிகலங்க செய்தது.
இந்தியா த்ரில் வெற்றி!
கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சரியாக 19 வது ஓவரின் முடிவில் கடைசி இரண்டு பந்தில் விராட்கோலி 2 சிக்ஸர்கள் பறக்கவிட ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பியது.
எனினும் கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அடுத்த இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுக்க, 4 வது பந்தில் விராட்கோலி சிக்ஸர் அடித்தார். இடுப்புக்கு மேலாக வீசப்பட்ட அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.
அதற்கு பதிலாக போடப்பட்ட இரண்டு பந்துகளில் மட்டும் 4 ரன்கள் கிடைத்தது.
ஆனால் அடுத்த பந்திலேயே தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதனால் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும்.

இந்நிலையில் களமிறங்கிய அஸ்வின் மிட் ஆப் திசையில் தூக்கிவீச, இந்திய அணியின் வெற்றியை விராட் கோலி உறுதி செய்தார்.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை கார் சிலிண்டர் விபத்து: சந்தேகம் எழுப்பும் பாஜக!
கோவை கார் விபத்து சதியா ? – டிஜிபி பதில்!