பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வெற்றிவாய்ப்பை இழந்த ஆஸ்திரேலிய அணியை மைக் டைசன் மேற்கோளை சுட்டிக்காட்டி கங்குலி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு, 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது.
பேட்டிங், பவுலிங் என்று இந்திய அணி முழுமையான அணியாக காட்சியளிக்கிறது. மறுபுறத்தில் கேப்டன் பேட் கம்மின்ஸ், வார்னர், ரென்ஷா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விலகலால் ஆஸ்திரேலியா அணி அபாயகட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தோல்வியுடன் நாடு திரும்பும் என்று பேசியுள்ளார்.
“நான் இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் தான் பார்க்கிறேன். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமான ஒன்று. ஏனெனில் இந்தியா தற்போது முழுபலத்துடன் உள்ளது.” என்றார்.
இதற்கிடையே ’வாயில் குத்து வாங்கும் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்’ என்ற மைக் டைசனின் மேற்கோளை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியா அணியை, கங்குலி விமர்சித்தார்.
அவர், “ஆஸ்திரேலியா அணியானது முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே தங்கள் வாயில் தாங்களே குத்திக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.
மேலும், மீதம் இருக்கும் போட்டிகளை குறித்து பேசுகையில், “திட்டமிடுதல் முக்கியமானது தான். ஆனால் அந்த திட்டத்தை குறைபாடுகள் நிறைந்த அணி கொண்டு முயற்சிப்பது முற்றிலும் பயனற்றது” என்று ஆஸ்திரேலியாவை குறிப்பிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கோரிக்கையை தாமதமாக நிறைவேற்றியது ஒரு சாதனையா? – டி.ஆர்.பாலு
உங்களால் தான் நான்: சமந்தாவின் உருக்கமான பதிவு!