வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை இன்று (அக்டோபர் 1) பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.
தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27ஆம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. தொடர்ந்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டமும் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
நான்காவது நாளில் சூரியன் சிறிது தலைகாட்ட, வங்கதேச அணி பேட்டிங்கை தொடர்ந்தது. அந்த அணியில் மொமினுல் 107 ரன்களுடன் கடைசி வரை போராடிய நிலையிலும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் (72 ரன்கள்) கே.எல்.ராகுல்(68 ரன்கள்) விராட் கோலி (47 ரன்கள்) குவித்தனர்.
இதனால் வெறும் 35 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 285 ரன்கள் குவித்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
52 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 4ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் குவித்திருந்தது.
இந்த நிலையில் போட்டியை வென்றாக வேண்டும் என்ற தீவிர மன நிலையுடன் 5வது மற்றும் கடைசிநாளில் வங்கதேசத்தை எதிர்கொண்டனர் இந்திய அணி வீரர்கள்.
காலை முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி பவுலர்கள் மைதானத்தில் களமிறங்கிய வங்கதேச வீரர்களை உடனடியாக பெவிலியனுக்கு திருப்பி அனுப்புவதில் தீவிரம் காட்டினர்.
அசத்தலாக பந்துவீசிய பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற, வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற வெறும் 95 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு முன்னதாக ரோகித் சர்மா 8 ரன்களிலும், சுப்மன் கில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் விராட்கோலி (29*) மற்றும் ரிஷப் பந்த்(4*) இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இரண்டு இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதன்மூலம் தனது சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வங்க தேசத்தை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்த வங்கதேச அணி, இந்தியாவுடன் படுதோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
அப்பல்லோ CCU – பெட் நம்பர் 61 இல் ரஜினி- ஹெல்த் அப்டேட்!