ஹைதராபாத்தில் நேற்று (அக்டோபர் 13) இரவு நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, வங்கதேசத்தை 3-0 என கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
அதன்படி டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என கணக்கில் வென்றது.
தொடர்ந்து குவாலியர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற டி20 போட்டியிலும் வென்ற இந்திய அணி 2-0 என நிலையில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இதில் அபிஷேக் 4 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
எனினும் அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சஞ்சுவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் சிக்ஸருக்கு மட்டுமே குறிவைத்து பந்தை விரட்டிய நிலையில் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
குறிப்பாக ஒரு ஓவரில் 5 சிக்சர்களை விரட்டிய சஞ்சு சாம்சன் வெறும் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் அடங்கும்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு 111 ரன்களும், சூர்யகுமார்யாதவ் 75 ரன்களும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களும் குவித்தனர்.
தொடர்ந்து 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன்மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை சஞ்சு சாம்சனும், தொடர் நாயகன் விருதை சூர்ய குமார் யாதவும் பெற்றனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
ஏற்கெனவே டெஸ்ட் தொடரையும் இந்தியா முழுமையாக கைப்பற்றியிருந்த நிலையில் வெறுங்கையுடன் சொந்த நாட்டுக்கு சோகமாக திரும்பியது வங்கதேச அணி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
லெபனான் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்: இஸ்ரேல் எச்சரிக்கை!
தொடர் மழை: உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தம் – 10,000 பேர் வேலை இழப்பு!