நன்றி இந்தியர்களே…! உற்சாக வரவேற்பால் வினேஷ் ஆனந்த கண்ணீர்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பதக்கம் கிடைக்காத நிலையில், கனத்த இதயத்துடன் தாயகம் திரும்பினார்.
ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் வினேஷ் போகத். ஆனால் இறுதிப்போட்டி நடக்கும் நாளன்று வினேஷ் போகத் 100 கிராம் கூடுதலாக இருந்ததன் காரணமாக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
82 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற ஜப்பான் வீராங்கனை சுசாகியை வீழ்த்தி இருந்ததால், வினேஷ் போகத் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் , கடைசி நேரத்தில் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டது இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
பின்னர், விளையாட்டு தீர்ப்பாயம் வரை சென்றும் வினேஷ் போகத்திற்கு பதக்கம் மறுக்கப்பட்டது. இதையடுத்து, பாரிஸில் இருந்து இன்று காலை வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனால் மனம் நெகிழ்ந்த வினேஷ் போகத், ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டார்.
இந்த தருணத்தில் சக மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோரும் உடன் இருந்தனர். இவர்களுடன் தான் வினேஷ் போகத், டெல்லி ஜந்தர் மந்தரில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி எம்பி பிர்ஜ் பூஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மக்களின் வரவேற்பை பார்த்த வினேஷ் போகத், நாட்டு மக்களுக்கு எனது நன்றிகள். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்தார். வினேஷ் போகத் தங்கம் வெல்லவில்லை என்றாலும், இந்தியாவின் தங்க மகள் அவர்தான் என்றும் பலரும் வாழ்த்தியுள்ளனர்.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் வினேஷ் போகத்துக்கு உண்டு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
காலையில் தேசியக் கொடி ஏற்றினார்… மாலையில் சடலமான பாதிரியார்… பின்னணியில் அத்தனை சோகம்!