ஒருநாள் கிரிக்கெட்:  மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20  போட்டிகளில் விளையாடுகிறது.இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று (ஜூலை 23) நடந்தது.
இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல்-ரவுண்டர் ஜாசன் ஹோல்டர் சேர்க்கப்படவில்லை. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கேப்டன் ஷிகர் தவானும், சுப்மான் கில்லும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். நேர்த்தியாக ஆடிய இவர்கள் ஓவருக்கு ஒன்று, இரண்டு பவுண்டரி வீதம் ஓடவிட்டு ஸ்கோரை துரிதமாக உயர்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சுப்மான் கில் 36 பந்துகளில் தனது முதலாவது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 14 ஓவர்களில் இந்தியா 100 ரன்களைத் தொட்டது.
அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. ஸ்கோர் 119-ஐ எட்டிய போது, பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓட முயற்சி செய்த சுப்மான் கில் (64 ரன், 53 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) நிகோலஸ் பூரனால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
அடுத்து தவானுடன் கைகோத்த ஸ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக ஆடினார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்தபோது இந்திய அணி 350 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் ஷிகர் தவான் வெளியேறியதும் நிலைமை மாறியது. மூன்று ரன்களில் தனது 18ஆவது சதத்தை தவற விட்ட தவான் 97 ரன்களில் (99 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) குடகேஷ் மோட்டியின் சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் 54 ரன்னிலும் (57 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் வெளியேறினர். 40 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி கட்டத்தில் இந்தியாவின் ரன் வேகம் கொஞ்சம் குறைந்தது.
இருப்பினும் தீபக் ஹூடாவும் (27 ரன்), அக்‌ஷர் பட்டேலும் (21 ரன்) அணியின் ஸ்கோரை 300-ஐ தாண்ட வைத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட்டுகளுக்கு 308 ரன்கள் குவித்தது. பின்னர் 309 ரன் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சார்பில் சாய் ஹோப் மற்றும் கெயில் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடியில் சாய் ஹோப் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக மேயர்சுடன், சாமர் பூரூக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. இந்தச் சூழலில் இந்த ஜோடியில் பூருக்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் கெயில் மேயர்ஸ் 75 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரன் 25 ரன்களும், ரோவன் பவல் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் 54 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். முடிவில் தங்களது அதிரடியான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்திய அகேல் ஹூசைன் 32 (32) ரன்களும், ரோமோரியோ செப்பர்டு 39 (25) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
 இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன்மூலம் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 24) நடைபெறுகிறது.

– ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.