இந்தியா – இலங்கை இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி டி20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
தொடர்ந்து, ரோகித் ஷர்மா தலைமையில் ஒரு நாள் போட்டி ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கியது.
முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 12) கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்திய வீரர்களின் அதிரடியான பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை அணி தொடக்கம் முதலே திணறியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இலங்கை அணியில், நுவனிது பெர்னாண்டோ 50 ரன்களும், குசல் மெண்டிஸ் 34 ரன்களும், துனித் வெல்லலகே 32 ரன்களும், வனிந்து ஹசரங்க 21 ரன்களும், அவிஷ்க பெர்னாண்டோ 20 ரன்களும், சாமிக்க கருணாரத்ன மற்றும் கசுன் ராஜித தலா 17 ரன்களும், சரித் அசலங்கா 15 ரன்களும், தசுன் ஷனக 2 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சீராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு 2வது ஒருநாள் போட்டியில் 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் மட்டுமே ஒருநாள் தொடரில் இலங்கை அணி வெற்றியைப் பெற முடியும் என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 215 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது.
இதனால் இலங்கை அணியின் ஒருநால் தொடர் வெற்றி என்பது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது. அதேசமயம் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால் ஒருநாள் தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
மோனிஷா
தடையை மீறி பிரதமருக்கு மாலை அணிவித்த இளைஞர்: கர்நாடகாவில் பரபரப்பு!
இப்படிப்பட்டவரா விஜய்? – நடிகர் ஷாம் சுவாரசியத் தகவல்!